வட மாகாண சுகாதார தொண்டர்கள் 388 பேருக்கு நியமனம் வழங்க பணிப்பு - அங்கஜனின் கோரிக்கைக்கு ஜனாதிபதி செவிசாய்ப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, May 1, 2021

வட மாகாண சுகாதார தொண்டர்கள் 388 பேருக்கு நியமனம் வழங்க பணிப்பு - அங்கஜனின் கோரிக்கைக்கு ஜனாதிபதி செவிசாய்ப்பு

வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றிய 388 பேருக்கு ஒரு இலட்சம் அரச வேலைவாய்ப்பு திட்டத்தில் நிரந்தர நியமனம் வழங்குமாறு ஜனாதிபதி செயலகம் பல்நோக்கு செயலணி திணைக்களத்தை பணித்துள்ளது.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திம விக்கிரமசிங்கவால் பல்நோக்கு செயலணியின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடந்த (29) அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்கள், ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன், வடமாகாண சுகாதாரத் தொண்டர்களின் அவல நிலை தொடர்பாக ஜனாதிபதிக்கு எடுத்துரைத்திருந்தார்.

வட மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நியமனம் வழங்கப்பட்டிருந்தாலும் கூட அவர்களுடைய சேவை, அர்ப்பணிப்பு ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். வட மாகாண சுகாதாரத் தொண்டர்கள் யுத்தம் மற்றும் இடர் காலத்திலும் அர்ப்பணிப்போடு சேவையாற்றியிருந்தனர் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அங்கஜனின் கருத்திற்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்குள் வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுங்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது செயலாளரை பணித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது வடக்கு மாகாணத்தில் 388 சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நியமனம் கிடைக்கப் பெற்று பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் நியமனம் இடைநிறுத்தப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் தமக்கான நீதி கிடைக்கும் வரை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக தொடர்ச்சியாக இரண்டு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி விசேட நிருபர்

No comments:

Post a Comment