"பிஎம்கேர் நிதி மூலம் 551 ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்படும்" : "கொரோனா வதந்திகளை தவிருங்கள்" - இந்திய பிரதமர் மோடி உருக்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 25, 2021

"பிஎம்கேர் நிதி மூலம் 551 ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்படும்" : "கொரோனா வதந்திகளை தவிருங்கள்" - இந்திய பிரதமர் மோடி உருக்கம்

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றை சமாளிக்கும் நோக்குடன் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட பிஎம்கேர் நிதியம் மூலம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 551 ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "551 ஆக்சிஜன் நிலையங்களும் மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்படும். வெகு விரைவில் அவற்றை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு விரைவாக ஆக்சிஜன் விநியோகம் செய்ய இந்த ஆலைகள் உதவியாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. 

இந்த ஆலைகளை உருவாக்குவதற்கான பணிகளை இந்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் மேற்கொள்ளும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த ஆண்டு பிஎம்கேர் நிதி மூலம் கூடுதலாக 162 பிரத்யேக பிரஷர் ஸ்விங் அப்சார்ப்ஷன் ஆக்சிஜன் ஆலைகளை மருத்து வளாகங்களில் அமைக்க ரூ. 201.58 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய ஆக்சிஜன் ஆலைகள் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் நரேந்திர மோடி முதலாவது பொது முடக்கத்தை அறிவித்தார். 

அப்போது வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடையாளர்கள் தாராளமாக பிஎம்கேர் ஃபண்டு என்ற பெயரிலான அமைப்புக்கு நிதியுதவி தருமாறு கேட்டுக் கொண்டார். அவரது அறிவிப்பை ஏற்று அடுத்த சில நாட்களிலேயே கோடிக்கணக்கில் நிதி குவியத் தொடங்கியது.

ஆனால், இந்த பிஎம்கேர் நிதி, எந்த அரசுத்துறையின் கீழ் செயல்படுகிறது என்று தகவல் உரிமை சட்டத்தின்படி விவரம் கேட்டபோது, அதற்கான பதிலை அரசு தரப்பு சரியாக வழங்கவில்லை. மேலும், இந்த நிதி, மத்திய கணக்குத் தணிக்கையாளர் வரம்புக்குள் வராது என்றும் கூறப்பட்டது.

காரணம், நாடு முழுவதும் பேரிடர் காலங்களில் மாநிலங்களுக்கு நிதி வழங்க பிரதமரின் நிவாரண நிதி என்ற பெயரிலேயே இதுநாள்வரை நன்கொடை வழங்குவது நடைமுறையாக இருந்தது. ஆனால், பிஎம்கேர் நிதியம், அரசிடம் இருந்து நிதி ஏதும் பெறவில்லை என்பதால் அரசு கட்டுப்பாட்டில் இல்லை என்று அரசு தரப்பு கூறி வருகிறது. 

அதேசமயம், இந்த நிதியத்தை அலுவல்பூர்வமாக மேற்பார்வையிடும் அரசு அந்த நிதியை கொரோனா தொடர்பான முக்கிய மருத்துவ திட்டங்களுக்காக நன்கொடையாக பெற இந்த அமைப்பை ஒரு பாலம் போல பயன்படுத்துவதாக நம்பப்படுகிறது.

நரேந்திர மோதி உருக்கம் : "கொரோனா வதந்திகளை தவிருங்கள்"

கொரோனா வைரஸ் நமது பொறுமையை மிகவும் சோதிக்கும் வகையில் உலக அளவில் தீவிரமாகியிருக்கிறது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மனதின் குரல் என்ற மன் கி பாத் நிகழ்ச்சியில் மாதந்தோறும் நாட்டின் பல்வேறு தரப்பினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிறது.

இந்த மாதம் அத்தகைய 76ஆவது நிகழ்ச்சியில் பேசிய மோடி, கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்கள ஊழியர்களிடம் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு பிரதிநிதிகள் பிரதமருடன் பேசி தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பிரதமரிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சில சந்தேகங்களை அவர்கள் கேட்டறிந்தனர். இடையிடையே தமது அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் மோடி விளக்கினார். அவர் பேசியதில் முக்கியமான சில அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

"கொரோனா வைரஸ் நமது பொறுமையை மிகவும் சோதனை செய்கிறது. அது இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது."

"இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்கத்தை ஏற்படுத்தி வரும் வேளையில், சிக்கலான இந்த நேரத்தை எதிர்கொள்ள சாதகமான உணர்வுகளை நாம் கொண்டிருக்க வேண்டும். இந்தப் பணியில் சுகாதார ஊழியர்கள், மருத்துவர்கள் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்."

"கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு ஆன்லைன் மூலம் ஆலோசனைகளை வழங்கி வரும் மருத்துவர்களின் சேவையை பாராட்டுகிறேன். கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை அதிகாரபூர்வ தளங்களில் இருந்து மட்டுமே பயன்படுத்துங்கள். வதந்திகளை தவிருங்கள். போலிச் செய்திகளுக்கு இரையாகாதீர்கள்."

நமக்கு அருகே இருந்த மற்றும் அன்புக்குரியவர்கள் பலர் அகாலமாக நம்மை விட்டுச் சென்று விட்டார்கள். கொரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக எதிர்கொண்ட பிறகு, நாடு உற்சாகமும், தன்னம்பிக்கையும் நிறைந்ததாக இருந்தது, ஆனால் இப்போது அதன் இரண்டாம் அலை நாட்டை உலுக்கி வருகிறது.

கடந்த காலங்களில் இந்த நெருக்கடியைச் சமாளிக்க, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் நான் நீண்ட விவாதம் நடத்தியுள்ளேன். நமது மருந்தியல் துறையை சேர்ந்தவர்கள், தடுப்பூசி உற்பத்தியாளர்கள், ஆக்ஸிஜன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் அல்லது மருத்துவத் துறையில் அறிவுள்ளவர்கள் என அனைவருமே தங்கள் முக்கியமான ஆலோசனைகளை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர்.

இந்த நேரத்தில், இந்த போரில் வெற்றி பெற, நிபுணர் மற்றும் அறியல்பூர்வ ஆலோசனைகளுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். மாநில அரசுகளின் முயற்சிகளை முன்னெடுப்பதில் இந்திய அரசு முழுமையாக ஈடுபட்டுள்ளது. மாநில அரசுகளும் தங்களின் பொறுப்புகளை நிறைவேற்ற தங்களால் முடிந்தவரை முயற்சி செய்கின்றன.

நாட்டின் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இந்த நேரத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு பெரிய போரில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் இந்த நோயைப் பற்றி அவர்களுக்கு எல்லா வகையான அனுபவங்களும் கிடைத்தன. உங்களுக்கு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் அல்லது ஏதேனும் அச்சங்கள் இருந்தால் சரியான மூலத்திலிருந்து தகவல்களைப் பெறுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் குடும்ப மருத்துவர், உங்களைச் சுற்றியுள்ள மருத்துவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசுங்கள். உடல் ரீதியான பிரச்னைகளுக்கு தயவுசெய்து அவர்களை அணுகவும்.

பல மருத்துவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தகவல்களை வழங்கி வருகின்றனர். அவர்கள் வாட்ஸ்அப், தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்குகிறார்கள். கொரோனா தொடர்புடைய சரியான தகவல்களை வழங்க மருத்துவ வலைதளங்கள் உள்ளன. அதில் சரியானவற்றை கண்டறிந்து தகவல்களை பெறுங்கள்.

இந்த நெருக்கடி நேரத்தில், தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள். எனவே, தடுப்பூசிகளைப் பற்றிய எந்த வதந்திகளையும் தவிர்த்து போலி செய்திகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இனி நாட்டின் கார்ப்பரேட் துறை நிறுவனங்களும் அவற்றின் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் பங்கு வகிக்கும்.

45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இந்திய அரசு இலவசமாக மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை அனுப்பியுள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். மே 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைக்கும்.

இலவச தடுப்பூசி பிரசாரத்தின் பயனை தங்கள் மாநிலத்தில் முடிந்தவரை மக்களுக்கு வழங்குமாறு மாநிலங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். தற்போது நடைபெற்று வரும் அரசாங்கத்தின் இலவச தடுப்பூசி இயக்கம் தொடரும் என்று கூற நான் விரும்புகிறேன்.

No comments:

Post a Comment