ஆசிய பளுதூக்கல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 4 இலங்கை வீரர்கள் பங்கேற்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, April 1, 2021

ஆசிய பளுதூக்கல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 4 இலங்கை வீரர்கள் பங்கேற்பு

(எம்.எம்.சில்வெஸ்டர்)

எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை உஸ்பெகிஸ்தானின் டஷ்கென்ட் நகரில் நடைபெறவுள்ள ஆசிய பளுதூக்கல் வல்லவர் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 3 வீரர்களும், ஒரு வீராங்கனையுமாக 4 பேர் பங்குகொள்ளவுள்ளதாக இலங்கை பளுதூக்கல் சம்மேளனம் தெரிவிக்கிறது.

இசுறு குமார, இந்திக்க திசாநாயக்க, திலங்க விராஜ் பலங்கசிங்க, சத்துரிக்கா பிரியந்தி ஆகிய நால்வரே இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

இவர்கள் நால்வரும் தகுதி காண் போட்டிகளில் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியதால் இப்போட்டியில் பங்கேற்ற தகுதி பெற்றதுடன், இவர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவமிக்கவர்களும் ஆவர்.

2019 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய வல்லவர் சிரேஷ்ட பளுதூக்கல் போட்டியின் ஆண்களுக்கான 55 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற திலங்க குமார ஆசிய பளுதூக்கல் வல்லவர் போட்டிக்கு தகுதி பெற்றமை விசேட அம்சமாகும்.

இப்போட்டியில் இவர் கிளீன் அன்ட் ஜேர்க் முறையில் 135 கிலோ கிராம் எடையை உயர்த்தியதன் மூலம் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார்.

இலங்கை பளுதூக்கல் வரலாற்றில் ஆசிய பளுதூக்கல் வல்லவர் போட்டியில் பெற்றுக் கொண்ட ஒரேயொரு பதக்கம் இதுவாகும்.

கடந்த முறை நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற இந்திக்க திசாநாயக்க இம்முறை 73 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவிலும், விராஜ் பலங்கசிங்க 61 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவிலும் போட்டியிடவுள்ளனர்.

இப்போட்டித் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படும் ஒரேயொரு வீரங்கனையான சத்துரிக்கா பிரியந்தி 81 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவில் பங்கேற்கவுள்ளார்.

இவர்கள் இப்போட்டியில் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தும் பட்சத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தகுதியை பெறுவர். இதனால் இப்போட்டியில் இவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த இப்போட்டியானது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த நிலையிலேயே சர்வதேச பளுதூக்கல் சம்மேளனத்தின் வழிகாட்டுதல்கள்களுடன் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad