அரச நிர்வாகத்திற்கு ஜனாதிபதி கோத்தபய பொறுத்தமற்றவர் : 2019 இல் பகிரங்கமாக குறிப்பிட்டோம் என்கிறார் தம்பர அமில தேரர் - News View

About Us

About Us

Breaking

Monday, April 19, 2021

அரச நிர்வாகத்திற்கு ஜனாதிபதி கோத்தபய பொறுத்தமற்றவர் : 2019 இல் பகிரங்கமாக குறிப்பிட்டோம் என்கிறார் தம்பர அமில தேரர்

(இராஜதுரை ஹஷான்)

அரச நிர்வாகத்திற்கு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ பொறுத்தமற்றவர் என்பதை 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் கால பிரசார மேடைகளில் பகிரங்கமாக குறிப்பிட்டோம். நாம் குறிப்பிட்டதை 69 இலட்சம் மக்கள் தற்போது அனுபவ ரீதியில் உணர்ந்து கொண்டுள்ளார்கள். சுபீட்சமான கொள்கைத் திட்டத்திற்கு எதிரான கொள்கைத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் உறுப்பினர் தம்பர அமில தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியை சர்வதேசம் ஏற்கவில்லை. இதனை கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற 46 ஆவது கூட்டத் தொடர் ஊடாக அறிந்து கொள்ளலாம்.

யுத்த காலத்தில் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்ட யுத்த குற்றச்சாட்டுக்களை காட்டிலும் அதிகமான குற்றச்சாட்டுக்கள் 2019 நவம்பர் மாதத்துக்கு பிறகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பலவீனமாக அரச நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டமை, அரச திணைக்களங்களுக்கு சிவில் சேவைகள் குறித்து எவ்விதமான ஆளுமையும் இல்லாத இராணுவ அதிகாரிகள் தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டமை, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத செயற்பாடுகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் ஆகியவற்றை சர்வதேசம் அவதானித்து இலங்கையினை புறக்கணித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இச்சட்டமூலம் தொடர்பில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. துறைமுக நகரில் சீனாவிற்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கும் போது அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளை பகைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணான வகையில் பல விடயங்கள் சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அரச நிர்வாகத்துக்கு பொருத்தமற்றவர் என்பதை 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் கால பிரசார மேடைகளில் பகிரங்கமாக குறிப்பிட்டோம் நாம் குறிப்பிட்டதை நாட்டு மக்கள் ஏற்கவில்லை. 

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல பொய்யான குற்றச்சாட்டுக்கள், எண்ணிலடங்காத வாக்குறுதிகள் பல முன்வைக்கப்பட்டன. நாம் குறிப்பிட்ட விடயத்தை 69 இலட்சம் மக்கள் இன்று அனுபவ ரீதியில் புரிந்து கொண்டுள்ளார்கள். என்றார்.

No comments:

Post a Comment