உயிரிழந்த, அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் சம்பளம் ஆயுள்வரை தங்கி வாழ்வோருக்கு - சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் - பொலிஸ் சேவைக்கு புதிதாக 10,000 பேர் - போதைப் பொருள் தடுப்பு தேசிய கொள்கை விரைவில் : பாதுகாப்பு அமைச்சரவை ஆலோசனைக் குழுவில் தீர்மானம் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 8, 2021

உயிரிழந்த, அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் சம்பளம் ஆயுள்வரை தங்கி வாழ்வோருக்கு - சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் - பொலிஸ் சேவைக்கு புதிதாக 10,000 பேர் - போதைப் பொருள் தடுப்பு தேசிய கொள்கை விரைவில் : பாதுகாப்பு அமைச்சரவை ஆலோசனைக் குழுவில் தீர்மானம்

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு உயிர் வாழும்வரை வழங்கப்படுகின்ற சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உயிரிழந்த பின்னர் அவர்களிடம் தங்கி வாழ்வோருக்கும் உயிர் வாழும்வரை வழங்குவதற்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (08) கூடியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஆலோசனை குழுவின் முதலாவது கூட்டம் இதுவாகும். குழுவின் தலைமைப் பதவி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு உரித்துடையது என்ற வகையில் ஜனாதிபதி இதில் பங்குபற்றினார்.

தேசிய பாதுகாப்பு, சட்ட ஒழுங்கை நிலைநாட்டல், இராணுவ வீரர்களின் சம்பளம், போதைப்பொருள் ஒழிப்பு, பாதுகாப்பு அமைச்சுக்குரிய நிறுவனங்களின் வருடாந்த அறிக்கை போன்ற பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன. ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான அமைச்சரவை ஆலோசனை குழுவின் கூட்டத்திற்கு இவ்வளவு அமைச்சர்கள் கலந்துகொண்டது அண்மைக்காலத்தில் இதுவே முதற் தடவையாகுமென்று பாராளுமன்ற அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சட்ட, ஒழுங்கை நிலைநாட்டி மேம்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள செயற்பாடுகளைப் பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் பல்வேறு பிரதேசங்களின் தேவைக்கேற்ப 196 பொலிஸ் நிலையங்களை புதிதாக ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் பொலிஸ் சேவையின் மனித வலுவை அதிகரிப்பதற்காக ஆண், பெண் இருபாலாரில் இருந்தும் 10,000 பேர் புதிதாக இணைத்துக்கொள்ளப்படுவர்.

அங்கவீனமுற்ற, உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கான சம்பளம், கொடுப்பனவுகள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது. அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு உயிர் வாழும்வரை வழங்கப்படுகின்ற சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உயிரிழந்த பின்னர் அவர்களிடம் தங்கி வாழ்வோருக்கும் உயிர் வாழும்வரை வழங்குவதற்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை தற்போது அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உயிரிழந்த இராணுவ வீரர்களில் தங்கி வாழ்வோருக்கும் இச்சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் உயிர் வாழும் வரை பெற்றுக்கொள்வதற்கு இதனால் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. இராணுவ வீரர்களின் குடும்பங்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்காக போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அவசியமில்லை என்றும் போராட்டங்களின் பின்னால் இருப்பது வேறு நோக்கங்கள் என்றும் சுட்டிக்காட்டினார். இதற்கு முன்னர் நடைபெற்றதுபோல் போராட்டக்காரர்களுக்கு தற்போதைய அரசாங்கம் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தவில்லை என்று ஜனாதிபதி அவர்களும் பாதுகாப்பு செயலாளரும் குறிப்பிட்டனர்.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக கருத்து பரிமாறும்போது முன்வைக்கப்பட்ட ஆலோசனை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, போதைப்பொருள் ஒழிப்புக்காக புதிய தேசிய கொள்கை தற்போது தயாரித்து நிறைவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அது விரைவில் வெளியிடப்படும். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்கும்போது மத உபதேசங்களை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத அடிப்படைவாத சிந்தனைகளைக்கொண்ட புத்தகங்களை தடை செய்வது தொடர்பாக எழுந்த கருத்துக்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி, இத்தீர்மானம் குறித்த ஒரு மதத்தை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்டவை அல்ல என்றும் பொதுவாக அனைத்து வகையான மத அடிப்படைவாதத்தையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்டே எனவும் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு பிரிவினருக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளில் தென்னை அல்லது வேறு பொருத்தமான பயிரினங்களை பயிரிடுவதன் அவசியத்தை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, அதற்காக பயன்படுத்தக்கூடிய காணிகளை இனங்காணுமாறும் பாதுகாப்பு பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்தன, முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின் பிரதானிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் குழுவின் கூட்டத்தின் பின்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நான்கு வருட பூர்த்தியை முன்னிட்டு பரந்தளவில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடுகளுக்கு இணையாக தயாரிக்கப்பட்ட நினைவு மலர் ஜனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டது. “சிவ் தச சுரக்கி சிவ் வசர” மாநாடுகள் என்ற நினைவு மலர் கட்சியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மற்றும் ஊடகச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான ஆகியோரால் கையளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad