இலங்கையின் பொறுப்புக் கூறலுக்கான இலக்கை அடைய ஜெனிவா முக்கிய பங்காற்றும் - பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 21, 2021

இலங்கையின் பொறுப்புக் கூறலுக்கான இலக்கை அடைய ஜெனிவா முக்கிய பங்காற்றும் - பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்கான இறுதி இலக்கினை எட்டுவதற்கான முக்கிய பங்காற்றும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம்  தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடாக பொறுப்புக்கூறல் இலக்குகளை அடைய முடியுமா ?, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் பிரித்தானியாக கொண்டுவந்துள்ள பிரேரணை நிறைவேற்றப்படுமா?, இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்தால் பிரித்தானியாவின் அடுத்த கட்ட செயற்பாடு என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் கொழும்பில் உள்ள இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் மின்னஞ்சல் மூலமாக வினவியபோது, அதன் பேச்சாளர் ஒருவர் வழங்கிய பதிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நல்லிணக்கத்தை அடைவதற்கும், நீதியினைப் பெற்றுக் கொள்வதற்கும், அதேபோன்று உண்மையினைக் கண்டறிவதற்குமான சிறந்த வழியாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை என்ற கட்டமைப்பு என்பதே சரியான வழியாக இருக்குமென 2020 பெப்ரவரி, ஜுன், செப்டம்பர், ஆகிய மாதங்களில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட எமது அறிக்கைகளில் இணை அனுசரணை வழங்கும் குழுவானது மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

உள்ளுரில் வினைத்திறன் மிக்க பொறிமுறைகள் தோற்றம் பெறாதிருக்கும் நிலையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுதலை அடைவதற்கான இறுதி வழிமுறையை எட்டுவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது தொடர்ந்தும் மிக முக்கியமான பங்கினைக் கொண்டிருக்கும் என்று நாம் நம்புகின்றோம்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையை தொடர்ந்தும் வைத்திருத்தல் இலங்கையின் பொறுப்புக்கூறும் கடப்பாடு மீதான சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான கவனத்தினை சமிக்ஞையிடுதல், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பிரசன்னத்தை உறுதிப்படுத்தி தொடர்ச்சியான அறிக்கையிடலை மேற்கொள்வதற்கும் சாட்சியங்களை சேகரித்து பேணுதல், ஆகிய விடயங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினை கோருவதற்கான புதிய தீர்மானமொன்றிற்கு ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்காக நாம் மிகவும் கடினமாக செயற்பட்டு வருகின்றோம். இதுவரையிலான பொறுப்புக்கூறும் கடப்பாட்டின் பலாபலன்களை பாதுகாப்பதற்கு இது மிகவும் முக்கியமானதாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கேசரி

No comments:

Post a Comment