சிங்கராஜ வன அழிப்பு தொடர்பில் பேசிய மாணவி மீதான விமர்சனங்கள் கண்டிக்கதக்கவை - எமது தலைவர்கள் எந்தளவிற்கு அச்சமடைந்திருக்கிறார்கள் என்பதும் வெளிப்பட்டுள்ளது : ஹரினி அமரசூரிய - News View

Breaking

Post Top Ad

Thursday, March 18, 2021

சிங்கராஜ வன அழிப்பு தொடர்பில் பேசிய மாணவி மீதான விமர்சனங்கள் கண்டிக்கதக்கவை - எமது தலைவர்கள் எந்தளவிற்கு அச்சமடைந்திருக்கிறார்கள் என்பதும் வெளிப்பட்டுள்ளது : ஹரினி அமரசூரிய

(நா.தனுஜா)

சிங்கராஜ வன அழிப்பு தொடர்பில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கருத்து வெளியிட்ட பாக்யா அபேரத்ன என்ற மாணவி மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய கண்டனம் வெளியிட்டிருப்பதுடன், அவரை சுதந்திரமாக செயற்படுவதற்கு அனுமதிக்குமாறும் வலியுறுத்தியிருக்கிறார்.

பாக்யா அபேரத்னவிற்கு ஆதரவு தெரிவித்து தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அப்பதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது பாக்யா அபேரத்ன தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் எமது சமூகத்தின் மிகவும் வெறுக்கத்தக்க போக்கைப் பிரதிபலிக்கின்றது. முதலில் பாக்யா 19 வயதேயான மாணவி என்பதைப் புரிந்துகொள்வதுடன் அவரை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். 

குறித்தவொரு விடயத்தைப் பற்றி தனக்கும் அபிப்பிராயங்கள் உண்டு என்பதையும் அவற்றை வெளிப்படுத்துவதற்கான தைரியம் உண்டு என்பதையுமே அவர் வெளிப்படுத்தியிருந்தார். 

அதேவேளை அரச அதிகாரிகள் அவரை விசாரணைக்குட்படுத்தும் முறையிலிருந்து, உறுதியான தைரியமான இளைஞர்களை முறையாகக் கையாளும் தகுதி அவர்களுக்கு இல்லை என்பது தெளிவாகின்றது. அத்தகைய இளைஞர்கள் பரிகசிக்கப்படுவதுடன் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

மேலும் ஒரு பொதுவான கருத்தின் ஊடாக 19 வயதேயான யுவதியினால் நடைமுறை விடயங்களை ஆட்டம் காணச் செய்ய முடியும் என்பதும் அதனால் எமது தலைவர்கள் எந்தளவிற்கு அச்சமடைந்திருக்கிறார்கள் என்பதும் வெளிப்பட்டுள்ளது. இவையனைத்திற்கும் மேலாக எமது சமூகத்தில் காணப்படும் பாரிய இடைவெளியை இந்தச் சம்பவம் உணர்த்தியிருக்கிறது. 

ஒருவேளை பாக்யா அபேரத்ன வெளியிட்ட கருத்துக்கள் உண்மையில் சரியானவையாக இருந்தால், அவர் கூறிய அனைத்தும் ஏற்கனவே திட்டமிட்டு எழுதிக் கொடுக்கப்பட்டவை என்று கூறுவதன் ஊடாக மாத்திரம் நீர் வளம் பாதுகாக்கப்பட்டுவிடாது.

குறிப்பாக பாக்யா அபேரத்ன விமர்சனங்களுக்கும் அடக்குமுறைக்கும் உட்படுத்தப்படக் கூடாது. மாறாக அவர் பாதுகாக்கப்பட வேண்டும். அதுமாத்திரமன்றி இந்த செய்தி பெரிதும் வரவேற்பை பெறக்கூடிய நிலையிலுள்ள போது மாத்திரம் பாக்யாவை பயன்படுத்திவிட்டு, பின்னர் அவரை மறந்துவிடக்கூடாது. 

இந்த நாட்டின் மீதான எதிர்பார்ப்பு முழுமையாக இல்லாமல் போய்விடவில்லை என்பதையே பாக்யா அபேரத்ன வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தலைமை வகிப்பதற்கு இடமளிப்போம். அவர் மேலும் உயர்வதற்கும் சுதந்திரமான சுவாசிப்பதற்கும் இடமளிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad