சர்வதேச நாடுகளுடனான உறவுகளை கூட அரசாங்கம் தனது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறது - ஹர்ஷன ராஜகருண - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

சர்வதேச நாடுகளுடனான உறவுகளை கூட அரசாங்கம் தனது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறது - ஹர்ஷன ராஜகருண

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சீனாவுக்கு வரையறையற்ற முன்னுரிமை வழங்கியதால் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அழுத்தங்களை எதிர்க்கொள்ள நேரிட்டது. சர்வதேச நாடுகளுடனான உறவுகளை கூட அரசாங்கம் தனது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை விவகாரத்தை அரசாங்கம் குறுகிய அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறது. இராணுவத்தினரை மின்சார கதிரைக்கு கொண்டு செல்லும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் விவகாரம் காணப்படுகிறது என்று ஆளும் தரப்பினர் குறிப்பிட்டார்கள். இவர்களின் தவறான தேர்தல் பிரசாரங்களினால் இலங்கை சர்வதேச மட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டது.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து காணப்பட்ட நெருக்கடி நிலைமைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காணப்பட்டது. 

நல்லாட்சி அரசாங்கம் இராணுவத்தினரை சர்வதேசத்தில் காட்டிக் கொடுத்ததாக குறிப்பிடப்படும் செய்தி முற்றிலும் தவறானதாகும். நாட்டின் இறையாண்மையையும், சுயாதீனத்தன்மையும் அரசாங்கம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கவில்லை.

தற்போதைய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினை அணுகும் விதம் முற்றிலும் தவறானது. வெறுக்கத்தக்க பேச்சுக்களினால் தேசிய நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளக மட்டத்தில் காணப்படும் தவறுகளை திருத்திக் கொள்ளாமல் சர்வதேச அரங்கில் வீரவசனம் பேசுவது பயனற்றது. அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் பல நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் சீனாவுக்கு வரையறையற்ற முன்னுரிமை வழங்கப்பட்டது. இதன் காரணமாக அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அழுத்தங்கள் இலங்கை மீது செலுத்தப்பட்டன. தற்போதும் இந்நிலைமையே காணப்படுகிறது. 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு முனைய விவகாரத்தில் அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை இந்தியா பகிரங்கப்படுத்தியுள்ளது. இராஜதந்திர மட்டத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண எதிர்க்கட்சியினர் என்ற ரீதியில் ஒத்துழழைப்பு வழங்குவோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad