உயிர்த்த ஞாயிறு தாக்குகுதல் பிரதான சூத்திரதாரிகளை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவது மாத்திரமே நீதியை நிலைநாட்டுவதாக அமையும் - சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Friday, March 12, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குகுதல் பிரதான சூத்திரதாரிகளை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவது மாத்திரமே நீதியை நிலைநாட்டுவதாக அமையும் - சஜித் பிரேமதாச

(எம்.மனோசித்ரா)

மிலேச்சத்தனமான உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குகுதல்களில் தமது உறவுகளை இழந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதை விட, பிரதான சூத்திரதாரிகளை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவது மாத்திரமே அவர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதாக அமையும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க அண்மையில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் குற்ற விசாரணை பிரிவில் வாக்குமூலமளிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய நேற்று வியாழக்கிழமை அஷோக அபேசிங்கவுடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜே.சி.அலவத்துவல மற்றும் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் குற்ற விசாரணைப் பிரிவிற்கு சமூகமளித்திருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பது எனது பிரதான கடமையாகும். அதன் காரணமாகவே பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்கவுடன் நாமும் வருகை தந்துள்ளோம். 

மிலேச்சத்தனமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான குற்றவாளிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே சகலரதும் எதிர்பார்ப்பாகும்.

தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு இன்றும் கவலையிலுள்ள மக்களுக்கு வழங்கக் கூடிய ஒரே நீதி பிரதான குற்றவாளிகள் யார் என்பதை கண்டு பிடிப்பதாகும். 

தற்போது சமர்பிக்கப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் இதனுடன் தொடர்புடைய ஒரு பகுதி மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும் பிரதான சூத்திரதாரிகளை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியதே தற்போதைய தேவையாகும்.

69 இலட்சம் வாக்குகளை வழங்கி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய மக்களும் இதனையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எத்தகைய நிவாரணத்தை வழங்கினாலும், உயிரிழந்தவர்களை மீள உயிர்ப்பிக்க முடியாது. எனவே உண்மையை அடிப்படையாகக் கொண்டு ஒழுக்கமான விசாரணைகளை முன்னெடுத்து அவர்களுக்கான நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment