இலங்கை முஸ்லிம்கள் வீண் பேச்சுக்களை விடுத்து பெற்றுக் கொள்ள வேண்டியவைகளை சிந்திக்க வேண்டும் - பிரதமரின் இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

இலங்கை முஸ்லிம்கள் வீண் பேச்சுக்களை விடுத்து பெற்றுக் கொள்ள வேண்டியவைகளை சிந்திக்க வேண்டும் - பிரதமரின் இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார்

இலங்கை முஸ்லிம் சமூகம், விதண்டாவாதங்களையும் வீண் பேச்சுக்களையும் விட்டுவிட்டு யதார்த்தத்தை உணர்ந்து, ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டிய சேவைகள் சம்பந்தமாக சிந்திக்க வேண்டிய முக்கிய காலமிது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் பொதுச் செயலாளருமான அப்துல் சத்தார் தெரிவித்தார்.

குருநாகல் நகரில் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்குச் செல்லும் முஸ்லிம் மாணவிகளின் சீருடை சம்பந்தமாக அம்மாணவிகளின் பெற்றோர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து பேசுகையில், கடந்த காலங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பிழையான வழிநடத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் இன்று நாட்டில் பாரிய சமூகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய ஒரு துரதிருஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

விசேடமாக முஸ்லிம்கள் கிழக்கிற்கு வெளியே சிறுபான்மையாக வாழும் பிரதேசங்களில் அன்றாடம் மிகவும் சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த நாட்டின் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் கூடுதலானவர்கள் முஸ்லிம் சமூகத்துடன் மிகவும் இணக்கப்பாட்டுடன் வாழ்ந்தாலும் எதிர்க்கட்சியைச் சார்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் இனவாதப் பேச்சுக்கள் மற்றும் அரசியல் இலாபத்திற்கான நடவடிக்கைகளானது முஸ்லிம்கள் மீது வீண் குற்றம் சுமத்த அல்லது சந்தேகப்படுவதற்கு வசதியை அமைத்துக் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் இருந்து மீள்வதற்கான நல்லெண்ணத்தை முஸ்லிம்களாலேயே உருவாக்க முடியும். முஸ்லிம்கள் வாக்களிக்கா விட்டாலும் இன்று ஆட்சியிலுள்ள அரசாங்கம் மிகவும் ஸ்திரத் தன்மையில் உள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக இருப்பதன் மூலம் எங்களுக்குரிய காரியங்களை செய்து கொள்ள முடியாது. 

விசேடமாக எங்கள் மனதில் வேதனையைத் தந்த கொவிட் தொற்றின் மூலம் மரணித்த முஸ்லிம்களின் எரிப்பு விடயம் அரசியல் விடயமாக காட்டப்பட்டாலும் இன்று சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளது. இதை பிரச்சினை ஏற்படாதவாறு நல்ல முறையில் தீர்த்துத் தருவதாக இது சம்பந்தமாக ஆரம்பத்திலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எம்மிடம் உறுதியளித்திருந்தார்.

இருந்தாலும் சிலரின் அரசியல் நடவடிக்கைகளால் இந்த விடயம் காலம் கடத்தப்பட்டது. என்றாலும் இந்த விடயத்தை மிகவும் நல்ல முறையில் தீர்த்துத் தந்து முஸ்லிம் சமூகத்தை கௌரவப்படுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட, விசேடமாக நீதி அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான மர்ஜான் பளீழ், அதாவுல்லாஹ் உட்பட அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டியது எங்கள் கடமையாகும்.

இதேபோன்று இன்று ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் என்ற வகையில் இந்த நாட்டின் முஸ்லிம்களின் நல்வாழ்வுக்காக கௌரவத்திற்காக நாங்கள் உங்களோடு இருப்போம் என்பதை உறுதியாக கூறிக் கொள்வதுடன் தேர்தலின்போது முஸ்லிம் சமூகம் எங்களை மாற்றுக் கண்ணுடன் பார்த்தாலும் நானும் எமது அரசாங்கமும் மக்களின் பிரச்சினைகளின் போது அரசியல் பேதம் பார்க்க மாட்டோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

(மாவத்தகம நிருபர்)

No comments:

Post a Comment