மேற்கு முனைய அபிவிருத்தியில் இந்திய அரசாங்கத்தின் பங்குபற்றுதல் இல்லை - சிலர் மாத்திரமே எதிர்ப்பு பெருமளனவானோர் ஆதரவு : உதய கம்மன்பில - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

மேற்கு முனைய அபிவிருத்தியில் இந்திய அரசாங்கத்தின் பங்குபற்றுதல் இல்லை - சிலர் மாத்திரமே எதிர்ப்பு பெருமளனவானோர் ஆதரவு : உதய கம்மன்பில

(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் அதானி நிறுவனத்தை பரிந்துரைத்ததன் காரணமாகவே மேற்கு முனைய அபிவிருத்தியில் அந்நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் இணைந்து செயற்பட தீர்மானித்தது. இதில் இந்திய அரசாங்கத்தின் பங்குபற்றுதல் இல்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்கிழமை இணைய வழியூடாக நடைபெற்றது. இதன்போது மேற்கு முனைய விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அமைச்சரவை இணை பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு முனைய அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்ட முதலீட்டு நிறுவனமாக அதானி நிறுவனம் காணப்பட்டது.

எனினும் பின்னர் துறைமுக அபிவிருத்தி அதிகார சபையினூடாக கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்ததோடு, மேற்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து கூட்டு முயற்சியில் அபிவிருத்தி செய்வதற்கும் தீர்மானித்தது.

இதேவேளை கிழக்கு முனைய அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கத்தினால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட நிறுவனத்துடனேயே மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்தது. அதற்கமைய அபிவிருத்திக்கான இடம் மாற்றப்பட்டுள்ளதே தவிர முதலீட்டு நிறுவனம் மாற்றப்படவில்லை.

இந்நிலையிலேயே மேற்கு முனைய அபிவிருத்தியில் எமது பங்குபற்றல் இல்லை என்று இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. எனவேதான் இலங்கை அரசாங்கம் அதானி நிறுவனத்துடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது.

மேற்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு தரப்புக்களினாலும் அறிவிக்கப்பட்ட இரு நிலைப்பாடுகளும் சரியானவையாகும். மேற்கு முனைய அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கத்தினால் எந்தவொரு முதலீட்டு நிறுவனமும் பரிந்துரைக்கப்படவில்லை. அதற்கமையவே இந்தியாவின் அறிவிப்பு சரியெனக் கூறுகின்றோம். 


இதேவேளை கடந்த வார ஊடகவியலாளர் மாநாட்டில், 'இந்தியாவினால் கிழக்கு முனைய அபிவிருத்திக்காக பரிந்துரைக்கப்பட்ட நிறுவனத்துடனேயே இலங்கை இணைந்து செயற்படுகிறது.' என்று அமைச்சரவை பேச்சாளர் கூறிய விடயமும் சரியானதாகும்.

அதற்கமையவே முதலீட்டு நிறுவனத்தில் மாற்றமின்றி மேற்கு முனைய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்தது. இதனையே இந்தியாவினால் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனத்துடன் இலங்கை இணைந்து செயற்படுவதாக அறிவித்தோம். எனினும் ஜப்பான் இதுவரையில் எவ்வித முதலீட்டாளர்களையும் பரிந்துரைக்கவில்லை.

கிழக்கு முனையம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அதனை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் மேற்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் அவ்வாறான எதிர்ப்புக்கள் வெளியிடப்படவில்லை. சிலர் மாத்திரமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனினும் பெருமளனவானோர் மேற்கு முனைய அபிவிருத்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேவேளை கிழக்கு முனையத்தை வெளிநாட்டு கடன் பெற்று அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக, தேசிய வங்கிகளிடமிருந்து கடன் பெற்று துறைமுக அதிகார சபையினூடாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad