200 வருடம் பழைமையான கத்தி மாயம் - லெச்சுமி தோட்ட முத்துமாரியம்மன் ஆலயத்தில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 9, 2021

200 வருடம் பழைமையான கத்தி மாயம் - லெச்சுமி தோட்ட முத்துமாரியம்மன் ஆலயத்தில் சம்பவம்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் கிழ் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 200 வருடம் பழைமை வாய்ந்த கத்தி ஒன்று காணாமல் போனமையினால் குறித்த தோட்ட பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதோடு தோட்ட தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லாது பணி பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த தோட்டப் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற போது இந்த ஆலயத்தில் உள்ள பழைமை வாய்ந்த கத்தி ஒன்று காணாமல் போனமை தொடர்பில் பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது ஆலய நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தோட்டப் பொதுமக்கள் கத்தி காணாமல் போனமை தொடர்பில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்யப்பட்டமைக்கு அமைய குறித்த தோட்டப் பகுதிக்கு விரைந்த நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் எட்டு பேரை கைது செய்துள்ளனர். 

அண்மையில் மஸ்கெலியா சாமிமலை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற பூஜை ஒன்றுக்காக குறித்த கத்தி சாமிமலை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் ஆலயத்திற்கு கொண்டுவரப்படவில்லை எனவும் குறித்த கத்திக்கு பதிலாக வேறு ஒரு கத்தியினை ஆலயத்திற்கு ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

No comments:

Post a Comment