1000 ரூபா சம்பளத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி ஓரிரு தினங்களில் வௌியீடு - கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 2, 2021

1000 ரூபா சம்பளத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி ஓரிரு தினங்களில் வௌியீடு - கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானி இன்னும் ஓரிரு தினங்களில் வௌியாகவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக சம்பள நிர்ணய சபையில் எடுத்த தீர்மானத்திற்கு தொழில் அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.

சம்பள நிர்ணய சபை நேற்று (01) கூடி கலந்துரையாடிய போது இந்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபா வரையான சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனை குறித்து ஆட்சேபனைகளை சமர்பிக்க கடந்த 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த காலப்பகுதியில் தோட்ட நிறுவனங்களிடம் இருந்து 197 ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றதாக தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

கிடைத்த ஆட்சேபனைகளை ஆராய்ந்து, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு தினங்களில் வர்த்தமானி வௌியாகும் எனவும் அன்றைய தினம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை தோட்ட நிறுவனங்கள் கட்டாயம் செலுத்த வேண்டும் எனவும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அவ்வாறு வழங்காவிட்டால், அது தொடர்பில் தொழில் திணைக்களத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் நன்மை தொடர்பிலும் தொழில் அமைச்சர் தௌிவுபடுத்தினார்.

”தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு 700 ரூபா சம்பளம் கிடைக்கிறது. அதனை விட மேலதிகமாக 50 ரூபா கொடுப்பனவு கிடைக்கிறது. ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றுக்கு, 161 ரூபாவை முதலாளிமார் செலுத்த வேண்டும். அதன்படி, அவர்களுக்கு ஒரு நாளைக்கு 911 ரூபா கிடைத்தது. 

எனினும், தற்போது எடுத்துள்ள தீர்மானத்திற்கு ஏற்ப, அவர்களுக்கு நாளாந்த சம்பளம் 900 ரூபா. வரவு செலவுத் திட்ட கொடுப்பனவு 100 ரூபா. அத்துடன், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியம் என்பற்றுக்கு முதலாளிமார் ஒரு நாளைக்கு 230 ரூபா செலுத்த வேண்டும். அதன்படி, 1230 ரூபா ஒரு நாளைக்கு அவர்களுக்கு கிடைக்கிறது. 

முன்னர் 911 ரூபா கிடைத்தது. எனினும், தற்போது புதிய முறைப்படி ஒரு நாளைக்கு 319 ரூபா மேலதிக வருமானத்தை அவர்கள் பெறவுள்ளனர். மொத்த சம்பளத்துடன் பார்க்கும் போது இது 35 வீத அதிகரிப்பாகும்” என அவர் தௌிவூட்டினார்.

இதேவேளை, சம்பள நிர்ணய சபையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமையினால், கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து தாம் விலகுவதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தமக்கு பாதகமான பல விடயங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்த போதிலும், இதுவரை காலம் அதனடிப்படையில் செயற்பட்டு வந்ததாகவும், தற்போது அந்த அனைத்து பிணைப்புக்களும் இல்லாமல் போவதாகவும் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.

கூட்டு ஒப்பந்த காலத்தில் வருடத்திற்கு 300 நாட்கள் வேலை வழங்கிய போதிலும், எதிர்காலத்தில் சம்பளம் வழங்க முடியுமான தொகைக்கே வேலை வழங்கவுள்ளதாகவும் ரொஷான் இராஜதுரை குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment