மட்டக்களப்பு மாநகர ஆணையாளரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் - ஆளுநருக்கு மகஜர் கையளிப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, February 18, 2021

மட்டக்களப்பு மாநகர ஆணையாளரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் - ஆளுநருக்கு மகஜர் கையளிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகாரத்திலுள்ள மட்டக்களப்பு மாநகர சபையில் கொண்டுவரப்பட்ட மாநகர சபை ஆணையாளரின் அதிகாரத்தைக் குறைக்கும் பிரேரணைக்கு எதிராக மாநகர சபை ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் நேற்றுமுன்தினம் (16) ஈடுபட்டனர்.

மாநகர சபை முதல்வருக்கும் புதிதாக கடமையேற்ற ஆணையாளர் எஸ்.தயாபாரனுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையையடுத்து கடந்த 8ஆம் திகதி சபை அமர்வில் ஆணையாளரின் அதிகாரத்தை குறைக்கும் பிரேரணை கொண்டுவரப்பட்டது.

அதன்போது சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் உட்பட 18 பேர் சபையில் இருந்து வெளியேறிய நிலையில், 20 உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் தயாபரனின் கடமை அதிகாரத்தை மாநகர சபை அமர்வில் குறைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் நேற்றுமுன்தினம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஏற்பாட்டில் மாநகர சபையில் கடமை புரியும் ஊழியர்கள் அனைவரும் கடமையை பகிஷ்கரித்து மாநகர சபைக்கு முன்னால் ஒன்றிணைந்து ஆணையாளரின் சேவையை கலங்கப்படுத்தாதே, ஆணையாளரின் அதிகாரத்தை குறைக்க நீங்கள் யார்? ஊழியரை அதிகாரம் செய்யும் உரிமை உங்களுக்கு கிடையாது, அரசாங்கத்தில் கடமை புரியும் உறுப்பினரே உங்கள் கடமையை துஷ்பிரயோகம் செய்யாதே, ஆணையாளர் எமது தலைவர், ஊழியர்கள் அடிமை இல்லை, நிர்வாகத்தில் அரசியல் வேண்டாம், போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் எந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அங்கிருந்து நகரின் மத்தியிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று நகர் காந்தி பூங்கா முன்னால் சில நிமிடங்கள் தரித்து நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பின்னர் ஊர்வலமாக மாநகர சபையை அடைந்தனர்.

பின்னர் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஆளுநருக்கு கையளிக்கும் வகையில் மாநகர சபை ஆணையாளரிடம் கையளித்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மட்டக்களப்பு, புதிய காத்தான்குடி நிருபர்கள்

No comments:

Post a Comment

Post Bottom Ad