கொரோனா தொற்றாளர்கள், மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் - மதிப்பீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை : எச்சரிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Thursday, February 18, 2021

கொரோனா தொற்றாளர்கள், மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் - மதிப்பீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை : எச்சரிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை முறையாக முன்னெடுத்தல் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடுமையாக்குதல் உள்ளிட்டவற்றை ஸ்திரப்படுத்தினால் மாத்திரமே மே மாதத்திலாவது தொற்றாளர் எண்ணிக்கையை குறைவடையச் செய்ய முடியும். அவ்வாறில்லை எனில் தொற்றாளர் எண்ணிக்கையுடன் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்தார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், உலகலாவிய ரீதியில் நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும், இலங்கையில் அதற்கு எதிர்மாறாக தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்தோடு மரணங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து செல்கிறது. 

எனவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடுமையாக்கல் என்பவற்றின் மூலம் மே மாதத்திலாவது தொற்றாளர் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும்.

தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதில் ஏற்படும் கால தாமதமே கொழும்பிற்கு வெளியில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமைக்கு பிரதான காரணியாகும்.

எனவே தொற்றாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதை துரிதப்படுத்த வேண்டும். அவ்வாறில்லை என்றால் அழைத்துச் செல்லும் வரை அவர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் ஆலோசனை வழங்க வேண்டும்.

மேல் மாகாணங்களில் கடந்த சில வாரங்களாக கொவிட் பரவல் அபாயமானது 40 வீதமாகக் குறைவடைந்திருந்த போதிலும், கடந்த சில தினங்களில் 60 வீதம் வரை அபாய நிலை உயர்வடைந்துள்ளது.

எனவே மேல் மாகாணம் தொடர்பில் ஆரம்பத்தைப் போன்றே உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். இரத்தினபுரி, கண்டி, கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தற்போது அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கை 900 வரை அதிகரித்தபோது மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று நாம் ஆரம்பத்திலேயே எச்சரிக்கை விடுத்தோம்.

எனவே அது தொடர்பில் மதிப்பீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினோம். ஆனால் அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை. 60 வயதுக்கு குறைந்தவர்களின் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இந்நிலையில் இங்கிலாந்தில் இனங்காணப்பட்டுள்ள உருமாறிய புதிய வகை வைரஸானது நாம் எதிர்பார்ப்பதை விடவும் பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே இலங்கையில் அதனால் பாரிய பாதிப்புக்கள் எவையும் ஏற்படாது என்று கவனயீனமாக இருந்தால் தற்போதுள்ளதை விட மோசமான நிலைக்கு செல்லக் கூடும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad