ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு இலங்கையின் ஜனநாயக தன்மை புரிய வேண்டும் - உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 17, 2021

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு இலங்கையின் ஜனநாயக தன்மை புரிய வேண்டும் - உதய கம்மன்பில

(எம்.மனோசித்ரா)

ஆளுந்தரப்பில் காணப்படுகின்ற கருத்து முரண்பாடுகள் பரந்தளவில் விவாதத்திற்கு உட்படுத்தப்படுவதன் மூலம் அரசாங்கத்தில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவிக்கின்றோம். இவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கும் புரிய வேண்டும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ஆளும் கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் இல்லை. நாம் ஆரம்பத்திலிருந்து இரட்டை குடியுரிமையுடையோர் நாட்டில் முக்கிய பதவிகள் வகிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம். 

இதற்கு தகுந்த இரு காரணிகளையும் நாம் முன்வைத்துள்ளோம். புதிய அரசியலமைப்பு தொடர்பான எமது கட்சியின் பரிந்துரைகளில் இது பற்றி நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த பிரச்சினை ஏற்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாம் இதே நிலைப்பாட்டிலேயே இருந்தோம். எனவே இதனை புதிதாக தோன்றிய பிரச்சினையாகக் கருத வேண்டாம்.

இம்முறை அதிகாரம் தனி கட்சியொன்றுக்கு மாத்திரம் கிடைக்கவில்லை. 15 கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டணிக்கே அதிகாரம் கிடைத்துள்ளது. நாம் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றோம் என்றால், கட்சிகளை கைவிட்டு யாருமே பொதுஜன பெரமுன உறுப்பினராக இல்லாமலிருந்திருக்க முடியும்.

எனினும் எம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நிலைப்பாடுகள் உள்ளதன் காரணமாகவே வெவ்வேறு கட்சிகளாக கூட்டணியமைத்துள்ளோம். வெவ்வேறு நிலைப்பாடுகளில் இணக்கம் காணக்கூடிய விடயங்களே சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

சுபீட்சத்தின் நோக்கிற்கு அனைவரும் இணங்குகின்றோம். அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. எனினும் அதன் வெளிப்புற தன்மை தொடர்பில் தொடர்ச்சியாக எமக்கிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

பத்து இலட்சம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கூட்டணியில் தினமும் முரண்பாடுகள் ஏற்பட்டாலும் அது புதுமைப்பட வேண்டிய காரணியல்ல. 

குறித்த முரண்பாடுகள் பரந்தளவில் விவாதத்திற்கு உட்படும் போது அரசாங்கத்திற்குள் ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன். இது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு புரிய வேண்டும் என எண்ணுகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment