அரசாங்கத்தை விட்டு ஒருபோதும் வெளியேறமாட்டேன் ஆனால் என்னை வெளியேற்றுமா என தெரியவில்லை - பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்களின் அறியாமையை விமர்சிக்க முடியாது : அமைச்சர் விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Friday, February 19, 2021

அரசாங்கத்தை விட்டு ஒருபோதும் வெளியேறமாட்டேன் ஆனால் என்னை வெளியேற்றுமா என தெரியவில்லை - பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்களின் அறியாமையை விமர்சிக்க முடியாது : அமைச்சர் விமல் வீரவன்ச

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தை விட்டு ஒருபோதும் வெளியேறமாட்டேன் ஆனால் அரசாங்கம் என்னை வெளியேற்றி செல்லுமா என்பதை அறியமுடியவில்லை. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை ஆரோக்கியமான முறையில் முன்னெடுத்து செல்லவே முயற்சிக்கிறோம். எமக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களின் அறியாமையினை விமர்சிக்க முடியாது என கைத்தொழில் மற்றும் மூல வளங்கள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துலரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் தற்போதைய நிலைமை, நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து பல கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளோம். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உட்பட பல கட்சியின் உறுப்பினர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள். என்னுடைய விவகாரம் குறித்து பேசுவதற்காக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை.

பிற நாட்டவர்களுக்கு விற்றுள்ள தேசிய வளங்களை மீள பெறுவது சாத்தியமற்ற விடயமாகும். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடமிருந்து பெறுமளவிற்கு வளம் அரசாங்கத்திடம் கிடையாது. இருக்கும் வளங்களை பாதுகாத்து, மீட்க முடிந்த வளங்களை மீட்போம் என்ற வாக்குறுதிளையே நாட்டு மக்களுக்கு வழங்கினோம்.

எனக்கு எதிரான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகிறது என்று குறிப்பிட முடியாது. பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் காரணமில்லாமல் சிறுபிள்ளைகளை போல செயற்படுகிறார்கள். இவர்களை விமர்சிக்கவும், இவர்களை தூண்டிவிடுபவர்களை விமர்சிக்கவும் விரும்பவில்லை.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை ஆரோக்கியமான முறையில் முன்னெடுத்து செல்லவே முயற்சிக்கிறோம். ஒரு சில தவறுகள் காணப்படுகிறது. தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது அதனை அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடு என கருத முடியாது.

அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் வெளியேற மாட்டேன் அரசாங்கம் என்னை வெளியேற்றி செல்லுமா என்று குறிப்பிட முடியாது. தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம். அரசாங்கம் சிறந்த முறையில் செயற்பட்டால் மாத்திரமே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.

அரசாங்கத்திற்குள் முரண்பாடு தோற்றம் பெற்றுள்ளது ஆகவே அரசியல் ரீதியில் மாற்றம் ஏற்படும் என எவரும் கருத வேண்டாம். அனைத்து தரப்பினரையும் ஒன்றினைந்து அரசாங்கம் சிறந்த முறையில் செயற்படும் என்றார்.

No comments:

Post a Comment