தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம் இரண்டு தோணியில் கால் வைத்த கதையாகி உள்ளது - எம்.திலகராஜ் - News View

About Us

About Us

Breaking

Friday, February 12, 2021

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம் இரண்டு தோணியில் கால் வைத்த கதையாகி உள்ளது - எம்.திலகராஜ்

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம் இரண்டு தோணியில் கால் வைத்த கதையாகி இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயிரம் ரூபா நாட் சம்பளம் தொடர்பில் சம்பள நிர்ணய சபை எடுத்த முடிவுக்கு கம்பனிகள் இணங்கவில்லை என்பது அவர்கள் அதனை எதிர்த்து வாக்களித்ததில் இருந்தே தெளிவாக தெரிகிறது. மேலும் 14 நாள் கால அவகாசத்தினை பயன்படுத்தி அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் செல்லலாம். 

மறுபுறம் தாங்கள் 1000 ரூபா நாட் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டுவிட்டதாக அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கொண்டாடினாலும் அடுத்து வரும் மாதங்களில் அந்த சம்பளத்தை மாதாந்தம் பெறும் தொழிலாளர்கள் வாயிலாக அதன் உண்மைத் தன்மை வெளிப்படும். 

எது எவ்வாறாயினும் கடந்த கால் நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்த முறைமை கேள்விக்குட்படுத்தப்பட்ட சந்தர்ப்பம் இது என்ற வகையில் தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம் இரண்டு தோணியில் கால் வைத்த கதையாகி இருக்கிறது. அது பெருந்தோட்ட நிர்வாக முறைமை மாற்றத்தை நோக்கிய கோரிக்கையை வலுப்படுத்துவதாக அமையும்.

சம்பள நிர்ணய சபை ஊடாக தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தைத் தீர்மானிக்கும் முறைமை புதியதல்ல. ஆனாலும் கூட்டு ஒப்பந்தம் மூலம் தீர்மானிப்பதற்கான ஒரு முறைமை வந்தவுடன் அந்த முறைமை கிடப்பில் போடப்பட்டது. இப்போது மீண்டும் அந்த முறைமைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. 

ஏனெனில் கடந்த ஆண்டு ஆரம்பத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரமும் ஆண்டின் இறுதியில் பிரதமர் வரவு செலவுத் திட்டத்தில் விடுத்த அறிவிப்பும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைத் தரவில்லை. அது அரசாங்கத்துக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்த நிலையிலேயே சம்பள நிர்ணய சபையின் ஊடாக தீர்மானிப்பதற்கு தொழில் அமைச்சர் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளனர்.

இதனை கம்பனிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவு. அவர்கள் தமது ஆட்சேபனையைத் தெரிவிக்க 14 நாட்கள் கால அவகாசம் உண்டு. அதற்குள் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தங்களது தீர்மானத்தை வெளியிட்டு அதனை ஏற்று நடைமுறைப்படுத்த கம்பனிகள் நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர்கள் வழங்கும் வேலை நாட்களைக் குறைக்க வாய்ப்பு உள்ளது. 

எனவே அது தொழிலாளர்களின் மாத வருமானத்தைக் குறைக்க வல்லது. இதனால், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை மாற்று வடிவில் வெளிவரும். இதன்போது அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் மேலும் இந்த விடயத்தில் கவனம் எடுக்கும் தேவை எழும்.

கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்த முறைமையில் மாற்றம் வேண்டுமென கடந்த காலங்களில் தொடர்ச்சியாக குரல் எழுப்பப்பட்டு வந்துள்ளது. இப்போது சம்பள நிர்ணய சபை மூலம் தீர்மானிக்கப்பட்ட ஒரு தொகையை கம்பனிகள் வழங்க வேண்டும் என அரசினால் நிர்ப்பந்திக்கப்படும் நிலையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்த முறைமையின் இறுக்கம் தளர்ந்துள்ளது என்பதனைக் காட்டுகிறது.

இந்த நிலைமைகளானது முறைமை மாற்றம் ஒன்றிற்கான அழுத்தத்தை அதிகரிக்கும். சமூக மட்டத்திலும் ஆயிரம் ரூபாதான் பிரச்சினை என்கிற நிலையைக் கடந்து இந்தப் பிரச்சினையைப் பார்க்கும் சூழ்நிலை ஏற்படும். இது அரசியல் ரீதியான ஒரு முன்னகர்வு என கொள்ளுதல் வேண்டும். அதே நேரம் அந்த அரசியலை கவனமாக முன்னகர்த்தவும் வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment