பாரதிய ஜனதா கட்சியின் அறிவிப்பிற்கு அரசாங்கம் ஏன் மௌனம் காக்கின்றது ? - உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மை தன்மை வெளியாகிவிடும் என்ற அச்சத்தில் மௌனம் : சந்திம விஜேசிறி - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

பாரதிய ஜனதா கட்சியின் அறிவிப்பிற்கு அரசாங்கம் ஏன் மௌனம் காக்கின்றது ? - உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மை தன்மை வெளியாகிவிடும் என்ற அச்சத்தில் மௌனம் : சந்திம விஜேசிறி

(எம்.மனோசித்ரா)

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்காக இந்தியா போன்ற நாடுகளிடம் உதவிகளைப் பெற்றுக் கொண்டமையினாலா பாரதிய ஜனதா கட்சியின் அறிவிப்பிற்கு அரசாங்கம் மௌனம் காக்கின்றது என கேள்வி எழுப்பியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம விஜேசிறி, மக்களிடையே நல்லிணக்கத்தை சிதைத்து அதிகாரத்தை தக்க வைக்க அரசாங்கம் முயற்சிக்க கூடாது எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கேள்வியெழுப்பினார். 

அவர் மேலும் கூறுகையில், பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் அதன் செயற்பாடுகளை ஆரம்பிப்பதாகக் கூறுகின்ற போதிலும் அமைச்சர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் மௌனமாக இருக்கின்றனர். 

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாகவே இதற்கான வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 20 இன் ஊடாக இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலிலிருந்து விலகிக் கொள்வதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகிறது?

அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் உதவிகளைப் பெற்றுக் கொண்டமையினால்தான் இவர்கள் இவ்வாறு அமைதியாக இருக்கிறார்கள். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் வெவ்வேறு நாடுகள் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதன் உண்மை தன்மை வெளியாகிவிடும் என்ற அச்சத்திலேயே அரசாங்கம் மௌனமாக இருக்கிறது.

இந்தியாவை புறக்கணித்து இலங்கையை சீன காலனித்துவ நாடாக மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆசிய அபிவிருத்தி வங்கியில் கடன் பெற்று அபிவிருத்தி திட்டத்தை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

தேசிய முதலீட்டாளர்களுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் போது முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறிய அரசாங்கம் ஏன் இந்த வேலைத்திட்டத்தை சீனாவுக்கு வழங்குகிறது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad