முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா இம்ரான் கான்? - News View

About Us

About Us

Breaking

Thursday, February 18, 2021

முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா இம்ரான் கான்?

ஜனாஸா எரிப்பு விவகாரம் சில வார அமைதிக்குப் பிறகு மீண்டும் தேசிய அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. “அடக்கம் செய்ய அனுமதி வழங்குவோம்’’ என பிரதமர் மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தே இதற்குக் காரணமாகும்.

பிரதமர் இவ்வாறு கூறிய போதிலும் இதுவரை கொவிட் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளிவரவில்லை. 

அதேபோன்று இது பிரதமரின் கருத்து தனிப்பட்ட கருத்து என்றும் சுகாதார அமைச்சினதோ நிபுணர் குழுவினதோ கருத்து அல்ல என்றும் அதே பாராளுமன்றத்தில் வைத்து தொற்று நோய் தடுப்பு இராஜாங்க அமைச்சரும் கொவிட்-19 கட்டுப்பாட்டு விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சருமான சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். 

பிரதமரின் அறிவிப்பு அரசியல் தீர்மானம் என நிபுணர் குழுவின் தலைவரும் தெரிவித்துள்ளார். இக்கருத்துக்கள் முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகளைத் தவிடுபொடியாக்கியுள்ளது.

பிரதமரின் இந்த திடீர் அறிவிப்புக்கு காரணம் எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதி முதல் மார்ச் 23ஆம் திகதி வரை ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணையே ஆகும். 

இந்த அமர்வின் போது இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான 17 பக்க அறிக்கையொன்றினை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெச்லட் சமர்ப்பிக்கவுள்ளார்.

குறித்த அறிக்கையில் ஜனாஸா எரிப்பு விவகாரம் பிரதான பேசு பொருளாக உள்ள நிலையில், அதிலிருந்து தப்புவதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாகவே பிரதமரின் இந்த அறிவிப்பு அரசியல் அரங்கில் நோக்கப்படுகிறது.

இதனிடையே இலங்கைக்கு எதிரான பிரேரணையைத் தோற்கடிக்கும் பொருட்டு முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதற்கான பிரசாரத்தை தற்போது பாகிஸ்தான் முன்னெடுத்து வருகிறது. இதற்காகவே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கை வருகிறார்.

இம்ரானின் இந்த விஜயத்தினை இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என இம்ரான் கான் தனது விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என இலங்கை முஸ்லிம்கள் எதிர்பார்க்கின்றனர்.

கிரிக்கெட் விளையாட்டு மூலம் மாத்திரமன்றி தனது முற்போக்கான கருத்துகளாலும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவரான இம்ரான் கான் விளங்குகிறார். 

உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழும் அநியாயங்களுக்கு எதிராக அவர் தொடர்ந்தும் குரலெழுப்பி வருகிறார். அந்த வகையில் தமது பிரச்சினைக்கும் இம்ரான் கான் தீர்வு பெற்றுத் தருவார் என முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

இம்ரான் கானின் வருகைக்கு முன்னராகவே ஜனாஸா விவகாரத்துக்கு தீர்வைத் தருவதாக அரசாங்கம் பாகிஸ்தானுக்கு உறுதியளித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன. அதற்கமையவே பிரதமர் மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும் அறிய முடிகிறது. எனினும் வர்த்தமானி அறிவித்தல் வெளிவரும் வரை பிரதமரின் வாக்குறுதியை நம்புவதற்கு முஸ்லிம்கள் தயாரில்லை.

எனவேதான் இம்ரான் கானின் இலங்கை விஜயத்துக்கு முன்னராகவே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும். அதற்கான அழுத்தங்களை பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்க வேண்டும். அவ்வாறு ஜனாஸா நல்லடக்க விவகாரத்திற்கு தீர்வு கிடைக்காத சூழலில் இம்ரான் கானின் வருகை நிகழுமாயின் அது நிச்சயமாக முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையை பொய்ப்பித்துவிடும். 

அதற்கு உலக முஸ்லிம்களின் நம்பிக்கையை வென்ற தலைவர் என்ற வகையில் இம்ரான் கான் இடமளிக்கமாட்டார் என நம்புகிறோம்.

Vidivelli

No comments:

Post a Comment