ரஞ்சன் ராமநாயகவை சிறையிலுள்ள மலசலகூடங்களை சுத்தம் செய்ய பணித்துள்ளனர் - அவருக்கான பாராளுமன்ற வாய்ப்பை பெற்றுக் கொடுங்கள் : ஹரின் பெர்னாண்டோ - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 23, 2021

ரஞ்சன் ராமநாயகவை சிறையிலுள்ள மலசலகூடங்களை சுத்தம் செய்ய பணித்துள்ளனர் - அவருக்கான பாராளுமன்ற வாய்ப்பை பெற்றுக் கொடுங்கள் : ஹரின் பெர்னாண்டோ

(ஆர்.யசி)

இன்று ரஞ்சன் ராமநாயகவை சிறையிலுள்ள மலசலகூடங்களை சுத்தம் செய்யவே பணித்துள்ளனர். மிக மோசமாக ரஞ்சன் ராமநாயக நடத்தப்படுகின்றார். அவருக்கு அரசாங்கம் அநியாயம் செய்கின்றது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இன்று நாம் எதிர்க்கட்சியில் உள்ளோம். ஆனால் நாளை நாம் ஆட்சிக்கு வந்ததும் நாமும் இவ்வாறே செயற்பட்டால், இன்று ஆளும் கட்சியில் உள்ள எத்தனை பேர் சிறைக்கு செல்ல வேண்டி வரும் என சிந்தித்துப் பாருங்கள் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, ரஞ்சன் ராமநாயக எம்.பியை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்திய நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த போதே ஹரின் பெர்னாண்டோ எம்.பி இதனை கூறினார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக நீதிமன்றத்தை அவமதித்ததை நாம் நியாயப்படுத்தவில்லை. அதேபோல் இவர்கள் அனைவரும் கள்ளர்கள் என அவர் கூறினாலும் யார் என நேரடியாக எவரையும் சுட்டிக்காட்டவில்லை. 

அதுமட்டுமல்ல எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் சிறையில் அடைக்கப்படுவதை நாம் விரும்பவில்லை. கொலை செய்திருந்தால், கொள்ளையில் ஈடுபட்டிருந்தால், தவறு செய்திருந்தால் அவர்களை தண்டிக்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை

எனவே ரஞ்சன் ராமநாயகவிற்கு நியாயத்தை பெற்றுக் கொடுங்கள். அவரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தவில்லை. அவருக்கான பாராளுமன்ற வாய்ப்பை பெற்றுக் கொடுங்கள் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad