பிரதமரின் கூற்றை மாற்றியமைக்க இராஜாங்க அமைச்சர் ஒருவரால் முடிந்தமை 20ஆவது திருத்தத்தின் எதிர்மறையான விளைவே - முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய - News View

About Us

About Us

Breaking

Friday, February 12, 2021

பிரதமரின் கூற்றை மாற்றியமைக்க இராஜாங்க அமைச்சர் ஒருவரால் முடிந்தமை 20ஆவது திருத்தத்தின் எதிர்மறையான விளைவே - முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட்-19 இல் மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரதமரின் கூற்றை மாற்றியமைப்பதற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவரால் முடிந்தது, 20ஆவது திருத்தத்தின் எதிர்மறையான விளைவாகும் என முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கொரொனா வைரஸினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குவதாக பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்து, மறுநாள் அவரின் கூற்றுக்கு மாற்றமாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக கரு ஜயசூரிய பதிவிட்டுள்ள டுவிட்டர் அறிவிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது, கொரோனா வைரஸ் நீரில் பரவுவதில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே பாராளுமன்றத்தில் தெரிவித்ததை அடிப்படையாக் கொண்டு, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரினால், கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய ஏன் முடியாது என பிரதமரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பிரதமர் அடக்கம் செய்ய அனுமதி வழங்குவோம் என பதிலளித்திருந்தார்.

இவ்வாறான நிலையில், நேற்று பாராளுமன்றத்தில் இது தொடர்பாக எதிர்க்கட்சியினால் சுகாதார இராஜாங்க அமைச்சரிடம் வினவப்பட்டபோது, கொவிட்டில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் அரசாங்கத்தின் தொழிநுட்பக் குழுவின் தீர்மானமே இறுதியானது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே பதிலளித்திருந்தார்.

பிரதமர் தெரிவித்திருந்த கருத்தை மாற்றி அமைப்பதற்கு இராஜாங்க அமைச்சருக்கு முடியுமாகியது, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் எதிர்மறையான விளைவாகும். இறுதியில் ஒட்டு மொத்த இலங்கையும் பிரதமரும் நகைப்புக்குள்ளாகியமை பாதிப்பாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment