இம்முறையேனும் தமிழில் தேசிய கீதத்தை இசைத்து இன நல்லிணக்கத்தினை வெளிப்படுத்துங்கள் - ஜனாதிபதி, பிரதமருக்கு புதிய ஜனநாயக முன்னணி கடிதம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 22, 2021

இம்முறையேனும் தமிழில் தேசிய கீதத்தை இசைத்து இன நல்லிணக்கத்தினை வெளிப்படுத்துங்கள் - ஜனாதிபதி, பிரதமருக்கு புதிய ஜனநாயக முன்னணி கடிதம்

தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. தொடர்ந்தும் தமிழர்களை அந்நியப்படுத்தாது அவர்களின் உள்ளங்களை வெற்றி கொள்ள அரசு முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த கட்சியின் உப தலைவரும் ஊடக பேச்சாளருமான சமன் குமார் கூறுகையில், இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன கடந்த வாரம் ஊடக சந்திப்பொன்றை நடாத்தி முன்னெடுக்கப்படும் ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். எவ்வாறாயினும் அந்த ஏற்பாடுகளும் சுதந்திர தின நிகழ்வுகளும் எந்தவொரு இன மக்களையும் காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே எதிர்வரும் சுதந்திர தினத்தன்று தமிழிலும் தேசிய கீதத்தை பாடி அரசாங்கத்தின் தேசிய இன நல்லிணக்கத்திற்கான சமிஞ்சையை வெளிப்படுத்த வேண்டும். இதனை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள கோரிக்கை கடிதத்தில் வலியுறுத்தியுள்ளோம்.

தமிழ் பேசும் மக்களும் இந்நாட்டு பிரஜைகள். அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. எனவே இந்த மக்களை தொடர்ந்தும் அந்நியப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடாது தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றி கொள்ள முயற்சிக்க வேண்டும். இதற்கு எதிர்வரும் சுதந்திர தினம் சிறப்பானதொரு சந்தர்ப்பமாகவே எமது கட்சி பார்க்கின்றது.

பாராளுமன்றத்ததை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் அரசாங்கத்தை இந்த விடயத்தில் வலியுறுத்த வேண்டும். இந்த கோரிக்கையானது தமிழ் பேசும் சமூகத்தின் அனைவரது கோரிக்கையாக இருக்க வேண்டும் .

அதேபோன்று தமிழ் சமூகத்திலும் ஒரு வேண்டுகோளை விடுக்கிறோம். பெப்ரவரி 4 ஆம் திகதி உங்கள் பிரதேசங்களில் ஏற்பாடு செய்திருக்கும் சுதந்திர நிகழ்வுகளில் தமிழிலேயே தேசியகீதத்தை பாடி எமது உரிமையை நாங்கள் பாதுகாக்குமாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment