தலைவர்கள் கையொப்பம் இட்டால் போதுமானது என்ற யோசனையை முன்மொழிந்தவர் சுமந்திரனே - சம்பந்தனின் கையொப்பத்தினை முதலில் பெற வேண்டும் என்றவர் விக்னேஸ்வரனே : கஜேந்திரகுமார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 27, 2021

தலைவர்கள் கையொப்பம் இட்டால் போதுமானது என்ற யோசனையை முன்மொழிந்தவர் சுமந்திரனே - சம்பந்தனின் கையொப்பத்தினை முதலில் பெற வேண்டும் என்றவர் விக்னேஸ்வரனே : கஜேந்திரகுமார்

(ஆர்.ராம்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடருக்காக தமிழ் அரசியல் கூட்டுக் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள முதலாவது பொது ஆவணத்தில் அரசியல் கூட்டுக்களின் தலைவர்கள் கையொப்பம் இட்டால் போதுமானது என்ற யோசனையை வவுனியாவில் வைத்து முன்மொழிந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

ஐ.நா.வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொது ஆவணத்தில் அரசியல் கூட்டுக் கட்சிகளின் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள், மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரே கையொப்பம் இட்டுள்ளனர். 

இந்நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் நேரடிச் சாட்சியங்கள் இந்தக் கடிதத்தில் உள்ளீர்க்கப்படாமையால் சர்ச்சைகள் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலமே அரசியல் கூட்டுக் கட்சிகளின் தலைவர்கள் மட்டும் கையொப்பம் இட்டால் போதுமானது என்ற யோசனையை வவுனியாவில் வைத்து முன்வைத்ததாகவும், அதனை தான் ஆமோதித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். எனினும், அந்தக் கருத்தினை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முழுமையாக மறுத்துள்ளார். 

அது தொடர்பில் அவர் அளித்துள்ள பதிலளிப்பில், வவுனியா கூட்டத்தில் இலங்கையின் பொறுப்புக் கூறல் விடயம் சம்பந்தமான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான இணக்கப்பாடு எடுக்கப்பட்டதன் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே, கூட்டுக் கட்சிகளின் தலைவர்களும், சிவில் அமைப்புக்களும் மட்டும் கையொப்பம் வைத்தால் போதுமானது என்று குறிப்பிட்டார். 

அச்சமயத்தில், அரசியல் தரப்பினரான நாம் மக்களின் பிரதிநிதிகள் ஆனால் நேரடியாக பாதிக்கப்பட்ட, இனப்படுகொலையின் சாட்சியங்களாக இருப்பவர்களையும், தமிழ் அரசியல் கைதிகள் சார்ந்த தரப்பினையும் உள்ளீர்த்து அவர்களின் கையொப்பத்தினை பெறுவதால் நாம் அனுப்பும் ஆவணம் மேலும் வலுவாகும் என்று நான் உடனேயே வலியுறுத்தினேன். ஆனால், அந்த யோசனை மறுதலிக்கப்பட்டது. 

வவுனியா கூட்டத்தில் அந்த விடயத்திற்கு யாரும் சாதமான நிலைமையை வெளிப்படுத்தியிருக்கவில்லை. இந்நிலையில் கொழும்பில் நடைபெற்ற ஆறாம் திகதி கூட்டத்தின் போதும் கையொப்ப விவகாரத்தினை வெளிப்படுத்தி ஏற்கனவே வவுனியாவில் நான் தெரிவித்த விடயங்களை மீண்டும் குறிப்பிட்டேன். இருப்பினும் முடிவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. 

இந்நிலையில் பொது ஆவணத்திற்கான வரைவு தயாரிக்கப்பட்டு இறுதியான தருணத்தில் விக்னேஸ்வரன் யார் யார் கையொப்பம் இடப்போகின்றார்கள் என்று மின்னஞ்சலில் கேள்வி எழுப்பினார். அதன்போது ஏற்கனவே வவுனியாவிலும், கொழும்பிலும் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை குறிப்பிட்டு கையொப்பங்களை விரைவாக பெறுமாறு கோரினேன். அதன்போது விக்னேஸ்வரனே சம்பந்தனின் கையொப்பத்தினை முதலில் பெற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் என்றார்.

No comments:

Post a Comment