பொதுத் தேர்தலை நடத்த முடியும் என்றால் ஏன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது, வெள்ளை யானை என்று விமர்சிப்பது தவறாகும் என்கிறார் காஞ்சன ஜயரத்ன - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 13, 2021

பொதுத் தேர்தலை நடத்த முடியும் என்றால் ஏன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது, வெள்ளை யானை என்று விமர்சிப்பது தவறாகும் என்கிறார் காஞ்சன ஜயரத்ன

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் பொதுத் தேர்தலை நடத்த முடியும் என்றால் ஏன் மாகாண சபைத் தேர்தலை சுகாதார பாதுகாப்பு வழிமுறைமைகளுக்கு அமைய நடத்த முடியாது. மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையில் நடத்தவே உயர்மட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாகாண சபை முறைமையை வெள்ளை யானை என்று விமர்சிப்பது தவறாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர் ஒன்றியத்தின் தலைவர் காஞ்சன ஜயரத்ன தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து நேற்று பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர் ஒன்றிய உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்த பல்வேறு தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். மாகாண சபைத் தேர்தலை இம்முறை மாத்திரம் பழைய முறையில் நடத்தி எதிர்காலத்தில் புதிய தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொண்டு புதிய தேர்தல் முறைமையை நடைமுறைப்படுத்தல் குறித்து தேரதல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்கள்.

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து எதிர்வரும் வாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண சபை முறைமையை வெள்ளை யானை என்று விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டது. மாகாண சபை முறைமையில் ஒரு சில குறைபாடுகள் காணப்படுகின்றன. இதற்காக மாகாண சபை முறைமையை இரத்து செய்வது நியாயமற்றது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் பொதுத் தேர்தலை நடத்த முடியுமாயின் ஏன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது.

பூகோள மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொவிட்-19 வைரஸ் எப்போது முடிவடையும் என்று எவராலும் குறிப்பிட முடியாது. இவ்வாறான நிலையில் மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்படுமா என்ற கேள்வி எழுகிறது.

மாகாண சபை முறைமையில் காணப்படும் குறைபாடுகளுக்கு தீர்வு கண்டு தேர்தலை விரைவில் நடத்துவது அவசியமாகும். மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. அரச நிர்வாகத்தின் ஒரு பகுதி மாகாண சபை ஊடாகவே முன்னெடுக்கப்படும். ஆகவே மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad