ஐ.நா மனித உரிமைகள் பேரவையைத் திசை திருப்பும் நோக்கில் ஜனாதிபதி விசேட ஆணைக்குழு - சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 26, 2021

ஐ.நா மனித உரிமைகள் பேரவையைத் திசை திருப்பும் நோக்கில் ஜனாதிபதி விசேட ஆணைக்குழு - சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைத் திசை திருப்பும் நோக்கில் ஜனாதிபதியினால் விசேட ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளதா என்று சந்தேகம் வெளியிட்டிருக்கும் சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான சர்வதேச பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் மூவரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் ஏற்கனவே ஆராய்ந்த குழுக்களின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை மீள ஆராய்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.நவாஸ் தலைமையில் மூவரடங்கிய விசேட குழுவொன்றை நியமித்திருக்கின்றார்.

பொறுப்புக்கூறல் மற்றும் நியாயமற்ற விசாரணைப் பொறிமுறை தொடர்பில் இலங்கை மிக மோசமான பதிவுகளைக் கொண்டிருக்கிறது. இது இவ்வாறிருக்க தற்போது புதிய குழுவொன்றை நியமிப்பதென்பது, பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரின் போது மேற்கொள்ளப்படத்தக்க நடவடிக்கைகளைத் திசை திருப்பும் நோக்கத்தைக் கொண்டதா என்ற சந்தேகம் எழுகின்றது. 

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரின் போது, இலங்கை தொடர்பான அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிப்பார். 

2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரின் போது 30/1, 34/1, 40/1 ஆகிய தீர்மானங்களிலிருந்து விலகுவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள விசேட குழு மற்றும் இதனையொத்த ஏனைய குழுக்கள் செயற்திறனற்றவையாகவும் தமக்கு வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள் உரிய பொறுப்புக்களை நிறைவேற்றும் இயலுமை அற்றவையாகவுமே இருந்து வந்திருக்கின்றன. 

இத்தகைய கட்டமைப்புக்கள், அரசியல் ரீதியில் தமக்கு எதிரானவர்களைத் தண்டிப்பதற்கும் தமக்கு வேண்டியவர்களைப் பொறுப்புக் கூறலில் இருந்து பாதுகாப்பதற்கும் உதவுகின்றன என்று எமது அறிக்கையொன்றில் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தோம்.

எனவே உள்ளகப் பொறுப்புக் கூறல் பொறிமுறையை உறுதி செய்வதற்கான இயலுமை இலங்கைக்கு இல்லை என்பதை ஏற்றுக் கொள்வதுடன், உள்நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு சர்வதேசப் பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடமும் ஆணையாளரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment