சவால்களை வெற்றி கொள்ள ஒரே தேசமாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் - சபாநாயகர் மஹிந்த யாப்பா - News View

About Us

About Us

Breaking

Friday, January 1, 2021

சவால்களை வெற்றி கொள்ள ஒரே தேசமாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் - சபாநாயகர் மஹிந்த யாப்பா

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொவிட்-19 சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றி கொள்ள ஒரே தேசமாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

2021 வருடத்துக்கான பாராளுமன்ற ஊழியர்கள் உறுதியுரை எடுத்துக் கொள்ளும் நிகழ்வு பாராளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், கடந்த வருடம் இலங்கைக்கு மாத்திரமன்றி முழு உலக நாடுகளுக்கும் நிச்சயமற்ற வருடமாக அமைந்தது. இந்த நிலைமை இவ்வாண்டும் நீடிக்கக்கூடும். 

எனவே சகலரும் புரிதலுடனும் கவனத்துடனும் செயற்படுவது அவசியமாகும். அனைவரையும் ஒன்றிணைத்து செயற்படுவதன் ஊடாக கொவிட்-19 சவாலை வெற்றி கொள்ள முடியும்.

கொவிட் சவாலுக்கு மத்தியிலும் ஜனநாயகத்துக்காக இலங்கையர்கள் பல வெற்றிகளைப் பெற்றுள்ளனர். வருடத்தின் ஆரம்பத்தில் நாட்டின் விவகாரங்களை முன்னெடுத்துச் செல்ல பாராளுமன்றம் இருக்கவில்லை.

எனினும், பாராளுமன்ற தேர்தலை நடத்தி மக்கள் புதிய அரசாங்கத்தையும் புதிய பாராளுமன்றத்தையும் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

அனைவரும் பொது நன்மைக்காக உழைக்க வேண்டும். கடந்த வருடத்தில் புதிய பாராளுமன்றம் மற்றும் அரசாங்கத்தை அமைக்கக் கிடைத்தமை குறிப்பிடத்தக்க வெற்றியாகும் என்றார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாட்தொகுதி பிரதானியுமான குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம் மற்றும் திணைக்களத் தலைவர்கள், பாராளுமன்ற பணியாளர்கள் மற்றும் இணைந்த சேவைகளின் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment