இஸ்ரேலில் தனது நாட்டு தூதரகத்தை அமைக்கிறது துபாய் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 24, 2021

இஸ்ரேலில் தனது நாட்டு தூதரகத்தை அமைக்கிறது துபாய்

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் (துபாய்) இஸ்ரேல் நாட்டில் தனது தூதரகத்தை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை தணிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

அதன் பயனாக 1979ஆம் ஆண்டு எகிப்தும், 1994ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. மேலும், இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரித்தன.

ஆனால் பிற அரபு வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தன. மேலும், இஸ்ரேலை ஒரு தனி நாடாக ஏற்றுக் கொள்ளாமலும், அந்நாட்டுடன் பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உட்பட எந்தவித உறவுகளையும் ஏற்படுத்தாமல் இருந்தன.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முயற்சியால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தன. 

இதையடுத்து, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் - பஹ்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆபிரகாம் உடன்படிக்கை என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் முன்னிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அப்துல் லத்தீப் அல் சயானி ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டு அந்நாட்டுடன் விமானப் போக்கு வரத்து, தூதரக நடவடிக்கைகள், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறையில் இணைந்து செயல்பட ஐக்கிய அரபு அமீரகம் சம்மதம் தெரிவித்தது. 

அதன் பயனாக இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சவுதி அரேபியா வழியாக விமானப் போக்கு வரத்து சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் தலைநகரில் தூதரகத்தை அமைக்கவும் அமீரகம் திட்டமிட்டது.

இந்நிலையில், வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேல் நாட்டில் தனது தூதரகத்தை அமைக்க அந்நாடு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment