ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தினார் ரணில் - தேசியப்பட்டியல் தொடர்பில் இறுதித்தீர்மானம் நாளை - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 12, 2021

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தினார் ரணில் - தேசியப்பட்டியல் தொடர்பில் இறுதித்தீர்மானம் நாளை

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ள ரணில் விக்கிரமசிங்க தேசியப்பட்டியல் விடயம் தொடர்பிலும் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. 

மேலும் இளைய தலைமைத்துவங்களை கட்சிக்குள் உருவாக்க வேண்டும் என்ற கருப்பொருளுக்கு அமைவாக கேகாலை நகர சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் குழுத்தலைவராக டபிள்யு.பீ. ரகித தயான் விமலரத்னவை நியமித்துள்ளார்.  இந்த நியமனம் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

இந்நியமனத்திற்கமைய கேகாலை நகர சபையில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளை தொகுதி ஒழுங்கிணைப்பாளரின் வழிகாட்டலின் கீழ் மேலும் வலுவாக முன்னெடுப்பீர்கள் என எதிர்பார்ப்பதாக ரணில் விக்கிரமசிங்க புதிய குழுத்தலைவருக்கு வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை புதன்கிழமை சிறிகொத்தாவில் கூடவுள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் விடயம் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பதவி நிலைகள் குறித்தும் தீர்மானிக்கப்படவுள்ளன. இந்த செயற்குழுக் கூட்டத்திற்கு கட்சியின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்க அதிகமானவர்களின் விருப்பமாக உள்ளது. எனினும் ரணில் விக்கிரமசிங்க இன்னமும் இணக்கத்தை தெரிவிக்கவில்லை. அதேபோல் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 

கட்சியின் தலைமைத்துவத்தை தவிர ஏனைய முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படும். மேலும் புதிய உறுப்பினர்களை இணைத்தல் மற்றும் கிராமிய மட்டத்திலான வேலைத்திட்டங்கள் குறித்து பரந்தளவில் நாளைய தினம் கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad