வெளிநாட்டு தொழிலாளர்களை தமது சொந்த பணத்தில் நாட்டிற்கு வருமாறு தெரிவிப்பது பாரிய துரோகமாகும் - ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 5, 2021

வெளிநாட்டு தொழிலாளர்களை தமது சொந்த பணத்தில் நாட்டிற்கு வருமாறு தெரிவிப்பது பாரிய துரோகமாகும் - ஹர்ஷ டி சில்வா

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதியம் ஒன்றை ஏற்படுத்தியேனும் வெளிநாட்டு தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அவர்களின் சொந்த பணத்தில் வருமாறு தெரிவிப்பது அவர்களுக்கு செய்யும் பாரிய துரோகமாகும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வருடாந்தம் சுமார் 6 ஆயிரம் டொலர் பில்லியன்களை நாட்டுக்கு கொண்டுவரும் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கொவிட் காரணமாக நாட்டுக்கு வர முடியாது தவிர்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். 

தொழில் இல்லாமல் அவர்கள் விடுதிகளில் எந்த வசதியும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். சிலர் கையில் பணம் இல்லாமைக்காக விபச்சார தொழிலை மேற்கொள்வதாக எமக்கு தகவல் கிடைத்திருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டு தொழிலாளர்களை அழைத்து வந்து வாக்களிக்கச் செய்தார்கள். அப்போது அவர்களை நாட்டு வீரர்கள் என்றே இந்த அரசாங்கம் பிரசாரம் செய்துவந்தது. ஆனால் இன்று அந்த வீரர்களை அரசாங்கம் மறந்து செயற்படுகின்றது. டுபாயில் இருந்து வருபவர்கள் அவர்களின் சொந்த பணத்தில் 15 மில்லியன் ரூபா செலுத்தியே வருகின்றனர். 

மேலும் கடந்த டிசம்பர் மாத ஆரம்பத்தில் சவூதி அரேபியாவில் இருந்து 3 ஆயிரத்து 500 பேர் நாட்டுக்கு வர எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்கள் நாட்டுக்கு வருவதாக இருந்தால் ஹோட்டல்களில் தனிமைப்படுத்திக் கொள்ள முடியுமாக இருந்தால் சொந்த பணத்தில் வரலாம் என்றே அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு ஆயிரத்து 800 பேர் வந்திருக்கின்றனர். இது மிகவும் அநியாயமாகும். 

வெளிநாட்டு தொழிலாளர்கள் அவர்களது சொந்த பணத்தில் நாட்டுக்கு வந்து, ஹொட்டல்களில் தனிமைப்படுத்தலில் இருப்பது என்பது அவர்கள் இரண்டு வருடங்கள் உழைக்கும் பணத்துக்கும் அதிக பணத்தை செலவிட வேண்டிவரும். 

அரசாங்கம் இந்த தொழிலாளர்ளுக்கு இவ்வாறு செய்யக்கூடாது. அதனால் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதியம் ஒன்றை ஏற்படுத்தி, அதன் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment