கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கும்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படக்கூடாது என்பதற்காகவே துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது - டில்வின் சில்வா - News View

Breaking

Post Top Ad

Thursday, January 7, 2021

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கும்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படக்கூடாது என்பதற்காகவே துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது - டில்வின் சில்வா

(எம்.மனோசித்ரா)

ரணில் - மைத்திரி ஆட்சியில் தேசிய சொத்துக்கள் விற்க்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவற்றை பாதுகாப்பதற்காக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய மக்கள் தற்போது அரசாங்கத்திடமிருந்து தேசிய சொத்துக்களை பாதுகாப்பதற்காக போராடுகின்றனர். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கும்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படக்கூடாது என்பதற்காகவே துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கிறது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அந்நியர்களுக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிடாமல் அரசாங்கம் தொடர்ச்சியாக அதன் செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. 

ரணில் - மைத்திரி ஆட்சியில் காணப்பட்ட பொருளாதார கொள்கையே தற்போதைய அரசாங்கத்திடமும் காணப்படுகிறது. மக்களால் ரணில் விக்கிரமசிங்க தோற்கடிக்கப்பட்டாலும் அவரது பொருளாதார கொள்கைகள் தோல்வியடையவில்லை. எனவே தற்போது எதிர்பார்ப்புக்களுடன் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய வாக்காளர்களே தோல்வியடைந்துள்ளனர்.

தேர்தல் காலத்தில் தேசிய சொத்துக்கள் விற்கப்படமாட்டாது என்றும் சீனாவிடமிருந்து அம்பாந்தோட்டை துறைமுகம் மீட்க்கப்படும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதியளித்தார். அது மாத்திரமின்றி ரணில் - மைத்திரி ஆட்சிக் காலத்தில் அவர்களால் வழங்கப்படும் தேசிய சொத்துக்களை வாங்க வேண்டாம் என்றும் அவர் சர்வதேசத்தை எச்சரித்தார். ஆனால் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

தற்போது நாட்டில் 15,000 பில்லியன் ரூபா கடன் சுமை காணப்படுகிறது. இவ்வாறிருக்கையில் மேலும் கடனைப் பெறவே அரசாங்கம் முற்படுகிறது. மொத்த கடன் தொகையில் சுமார் 40 வீதம் வெளிநாட்டு கடன்களாகும். தேசிய கடன்களை மீள செலுத்துவதற்கு அரசாங்கம் மேலதிகமாக நாணயத்தாள்களை அச்சிடுகிறது. 

ஆனால் வெளிநாட்டுக் கடன்களை மீள செலுத்துவதற்கு அவ்வாறு செய்ய முடியாது. டொலர்களை வருமானமாகப் பெற வேண்டும். ஆனால் தற்போது டொலர்களை ஈட்டுவதற்கான எந்த வழியும் இல்லை. இதற்கான ஒரு வழிமுறையாகவே தேசிய சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு விற்க்கப்படுகின்றன.

2021 ஆம் ஆண்டு வெளிநாட்டு கடன்களுக்காக அரசாங்கத்தினால் சுமார் 5.8 பில்லியன் டொலர் வட்டி செலுத்தப்பட வேண்டியுள்ளது. எனினும் இதனை செலுத்துமளவிற்கு வருமானம் நாட்டில் இல்லை. டொலர் வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்காமல் தேசிய சொத்துக்களை விற்கும் நடவடிக்கையையே அரசாங்கம் முன்னெடுக்கிறது. தேசிய சொத்துக்களை விற்பதை பிரதான பொருளாதார கொள்கையாகக் கொண்ட அரசாங்கம் கிழக்கு முனையத்தை விற்பது ஆச்சரியப்படக்கூடிய விடயமல்ல.

இலங்கையின் கடற்பகுதி கடற் போக்குவரத்தில் மிக முக்கியத்துவமுடையதாகும். இதனை உபயோகித்து அரசாங்கத்தால் இலாபம் ஈட்ட முடியும். ஆனால் அதற்கு பதிலாக துறைமுகங்கள் விற்கப்பட்டுள்ளன. 

இலங்கையில் கொழும்பு, காலி, திருகோணமலை, அம்பாந்தோட்டை, காங்கேசன்துறை, பேதுருதுட்டுவ மற்றும் ஒலுவில் என 7 துறைமுகங்கள் உள்ளன. இவற்றில் பேதுருதுட்டுவ மற்றும் ஒலுவில் என்பன செயலிழந்துள்ளன. அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளதால் அது எமக்கு உரித்துடையதல்ல. 

காலி மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் மிகக் குறைந்தளவான செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வாறெனில் எமக்காக எஞ்சியுள்ள ஒரேயொரு துறைமுகம் கொழும்பு துறைமுகம் மாத்திரமேயாகும்.

ஆனால் கொழும்பு துறைமுகம் முழுவதும் தற்போது எமக்கு சொந்தமல்ல. இதில் 4 முனையங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ளவற்றில் கிழக்கு முனையம் மாத்திரமே பாரிய கப்பல்கள் வரக்கூடியதும் அதிக வருமானம் ஈட்டக் கூடியதுமாகும். இதனையும் இந்தியாவிற்கு வழங்க முற்படுவது மிக மோசமான செயற்பாடாகும். 

இந்திய மீனவர்களின் கடும் எதிர்ப்பிற்கு உள்ளாகியுள்ள 'அதானி' என்ற நிறுவனத்திற்கு இதனை வழங்க முற்படுவது பாரதூரமான செயற்பாடாகும். சீனாவிற்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை வழங்கியமைக்காக இந்தியாவிற்கு அஞ்சி கிழக்கு முனையத்தை அந்நாட்டுக்கு வழங்கி தீர்வு காண அரசாங்கம் முற்படுகிறது.

தேர்தலின்போது துறைமுக ஊழியர்களால் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதனை விற்கப்போவதில்லை எனக்கூறி வாக்குறுதியளித்தார். 

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு செய்ய முடியாதது எதுவுமில்லை என்று கூறி மக்களை ஏமாற்றி ஆட்சியைக் கைப்பற்றிய அரசாங்கம் தற்போது கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்திலிருந்து வெளியேற முடியாது என்று கூறுகிறது. இது கேலிக்குரியது.

இவ்வாறான நிலையில் துறைமுகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அத்தியாவசிய சேவையை ஏன் இந்தியாவிற்கு விற்க முயற்சிக்கப்படுகிறது ? இதனை இந்தியாவிற்கு வழங்கும் போது ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை தடுப்பதற்காகவே இவ்வாறு அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய சொத்துக்களை பாதுகாப்பதற்காக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய மக்கள் தற்போது அரசாங்கத்திடமிருந்து அவற்றை பாதுகாப்பதற்காக போராடுகின்றனர்.

இலங்கையின் வறுமை நிலையை உணர்ந்து கொண்டுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடன்களை வழங்கி அதன் மூலம் நாட்டை நெருக்கடிக்குள் தள்ளி தேசிய சொத்துக்களை பறிமுதல் செய்ய தயாராகவுள்ளன. 

எவ்வாறிருப்பினும் அரசாங்கம் அனைத்து எதிர்ப்புக்களையும் மீறி கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குமாயின் அது பொருளாதார ரீதியிலும் நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும். 

எனவே தேசிய சொத்துக்களை பாதுகாப்பதற்காக அரசியல் பேதமின்றி அனைவருடனும் ஒன்றிணைந்து செயற்பட நாம் தயாராகவுள்ளோம். எதிர்வரும் 12 ஆம் திகதி இதற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுக்கவுள்ளோம். 

கிழக்கு முனையம் விற்கப்பட மாட்டாது எனக்கூறி பிரதமர் உள்ளிட்டோர் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றார்கள். தற்போது பிரதமரின் அதிகாரங்களும் குறைவடைந்துள்ளமை பல சந்தர்ப்பங்களில் நிரூபனமாகியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad