உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகளை கவனத்தில் கொள்ளாத மெக்சிகோ நாட்டு ஜனாதிபதிக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 26, 2021

உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகளை கவனத்தில் கொள்ளாத மெக்சிகோ நாட்டு ஜனாதிபதிக்கு கொரோனா

மெக்சிகோ நாட்டு ஜனாதிபதி லோபஸ் ஒப்ரடோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இன்னமும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றன.

அந்த வகையில் லத்தின் அமெரிக்க நாடுகளில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக மெக்சிகோ உள்ளது. 

அதுமட்டுமின்றி உலக அளவில் கொரோனா வைரஸ் உயிரிழப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்தபடியாக மெக்சிகோ 4வது இடத்தில் உள்ளது.

இதுவரை அங்கு சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதேபோல் அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.‌

மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலை அந்த நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் முறையாக கையாளவில்லை என்கின்ற விமர்சனம் ஆரம்பம் முதலே இருந்து வருகிறது.

அதற்கு ஏற்றார்போல் ஜனாதிபதி லோபஸ் ஒப்ரடோர் பொது நிகழ்வுகளில் பெரும்பாலும் முகக் கவசம் அணியாமல் கலந்துகொள்வது, கட்சிக் கூட்டங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அதிக அளவில் கூட்டத்தை சேர்ப்பது, அடிக்கடி பொது விமானங்களின் பயணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

அத்துடன் நாட்டு மக்களின் அன்றாட வாழ்வியலை சுட்டிக்காட்டி முழு ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ‘‘மெக்சிகோ மோசமான நிலைமையில் உள்ளது. மெக்சிகோவின் தலைவர்கள் கொரோனா வைரசை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் நாட்டு குடிமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்’’ என கூறினார்.

ஆனாலும் ஜனாதிபதி லோபஸ் ஒப்ரடோர் வைரஸ் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் முறையாக கடைபிடிக்கவில்லை என்று குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வந்தது.

67 வயதான லோபஸ் ஒப்ரடோருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தபோதிலும், மாரடைப்புக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்ட போதிலும் தான் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளப்போவதில்லை என ஏற்கனவே கூறியுள்ளார்.

அதேசமயம் வாரத்துக்கு ஒருமுறை அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் நேற்று அவருக்கு வழக்கம் போல் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் அவர் ‘‘நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

லேசான அறிகுறிகள், இருப்பினும், நான் ஏற்கனவே மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன். எப்போதும் போல, நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நாம் அனைவரும் முன்னேறுவோம்’’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரேசில் ஜனாதிபதி ஜெயீர் போல்சனாரோ, கவுதமாலா ஜனாதிபதி அலெஜான்ட்ரோ கியாமட்டி, ஹோண்டுராஸ் ஜனாதிபதி ஜுவான் ஆர்லாண்டோ மற்றும் பொலிவியாவின் அப்போதைய இடைக்கால ஜனாதிபதி ஜீனைன் அனாஸ் ஆகிய லத்தின் அமெரிக்க தலைவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad