பம்பாய் விமான நிலையத்திலிருந்து இலங்கை வரும் 1,323 கிலோ எடை கொண்ட தடுப்பூசிகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 27, 2021

பம்பாய் விமான நிலையத்திலிருந்து இலங்கை வரும் 1,323 கிலோ எடை கொண்ட தடுப்பூசிகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா அன்பளிப்புச் செய்யும் 05 இலட்சம் ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா ஷெனாகா தடுப்பூசியை ஏற்றிவரும் விசேட விமானம் இன்று முற்பகல் 11 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையுமென விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்தார். 

இலங்கைக்கு முதல் தடவையாக கொண்டுவரப்படும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார். 

அது தொடர்பில் மேஜர் ஜெனரல் சந்திரசிறி மேலும் தெரிவிக்கையில் இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள மேற்படி தடுப்பூசி இந்தியாவின் பம்பாய் மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக அதனை வழங்குகின்றது.

இத்தடுப்பூசியை ஏற்றிவரும் இந்திய விமான சேவைக்குச் சொந்தமான ஏ.ஐ.281 இலக்க விமானம் முதலில் புது டெல்லியிலிருந்து புறப்பட்டு பம்பாய் விமான நிலையத்தை சென்றடையவுள்ளது. 

அங்கிருந்து தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு இன்று மதியம் அளவில் அந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் மேற்படி விமான சேவை இந்தியாவின் புதுடெல்லியிலிருந்து நேரடியாக இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையம் வரை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

விமானம் மூலம் கொண்டுவரப்படவுள்ள தடுப்பூசிகள் சுமார் 1,323 கிலோ எடை கொண்டதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தில் விசேட குளிரூட்டிகளின் உதவியுடன் பாதுகாப்பாக மேற்படி தடுப்பூசி கொண்டுவரப்படவுள்ளதுடன் விமான நிலையத்தில் அது விசேட குளிரூட்டிகள் அறையில் களஞ்சியப்படுத்தப்பட்டு இன்றைய தினமே சுகாதார அமைச்சின் மருந்துகள் களஞ்சியப்படுத்தல் பிரிவு அதிகாரிகளிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment