11 வயது சிறுமியின் மரணத்தில் சந்தேகம் - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் - சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதாக உறுதியளிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 13, 2021

11 வயது சிறுமியின் மரணத்தில் சந்தேகம் - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் - சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதாக உறுதியளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை நடாத்தக்கோரியும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தியும் பெரியகல்லாறு பிரதான வீதியில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கொட்டும் மழையின் மத்தியிலும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பல்வேறு பதாகைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பேது சிறுமியின் மரணம் கொலையெனவும் குறித்த சிறுமியின் கொலைக்கு நியாயம் வேண்டும் எனவும் கோசமெழுப்பினர்.

ஊர்வலமாக பிரதான வீதியில் சென்று ஆர்ப்பாட்டம் நடாத்தியவர்கள் மட்டக்களப்பு - கல்முனை வீதியையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் 48 மணித்தியாலத்திற்குள் அவர்களை கைது செய்வோம் என வழங்கி உறுதிமொழியையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுமியின் மரண வீட்டுக்கு சென்று இறுதிச்சடங்கிலும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 11 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதுடன் குறித்த சிறுமி கடுமையான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுமியின் பாட்டியின் வீட்டில் இருந்த போது குறித்த சிறுமி தாக்கப்பட்டதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை சிறுமி கிராம சேவகரினால் மீட்கப்பட்டு கல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது சனிக்கிழமை வைத்தியசாலையில் இருந்த சிறுமியை சிறுமியின் சிறிய தாயார் அழைத்துச் சென்ற நிலையில் சிறுமி குறித்த சிறிய தாயின் வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிறுமி சித்திரவதைக்குள்ளானமை தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமி தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லையென பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டினர்.

குறித்த சிறுமி நீண்ட காலமாக துன்புறுத்தலுக்குள்ளாகிய நிலையில் சிறுமியை துன்புறுத்தியவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. அது தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லையெனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்

No comments:

Post a Comment

Post Bottom Ad