எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழக்குத் தொடுக்குமாறு பொலிஸ் தலைமையகம் ஆலோசனை - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழக்குத் தொடுக்குமாறு பொலிஸ் தலைமையகம் ஆலோசனை

(எம்.எப்.எம்.பஸீர்)

நாடாளாவிய ரீதியில், போதைப் பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களுக்கும் எதிராக எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழக்குத் தாக்கல் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 44 பொலிஸ் வலயங்களுக்கு பொறுப்பாக உள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் அல்லது பொலிஸ் அத்தியட்சர்கள், நாடளாவிய ரீதியில் 494 பொலிஸ் நிலையங்களை மேற்பார்வை செய்யும் உதவி பொலிஸ் அத்தியட்சர்கள், பொலிஸ் வலய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிகள் ஆகியோரை நேற்று விஷேட வீடியோ காணொளி மூலம் தொடர்புகொண்ட பொலிஸ் தலைமையகத்தின் விஷேட குழு இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதானி பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, பொலிஸ் குற்றத் தடுப்பு விவகாரத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி, பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாமந்த விஜேசேகர ஆகியோர் அடங்கிய குழுவே, பொலிஸ் தலைமையகத்திலிருந்து வீடியோ காணொளி ஊடாக இந்த ஆலோசனைகளை இவ்வாறு அனைத்து பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் வழங்கியது.

அதன்படி, போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள், முன் குற்றங்கள் உள்ளவர்கள், பாரிய போதைப் பொருள் கடத்தல் காகர்கள் தவிர, போதைப் பொருளுக்கு அடிமையானதன் விளைவாக போதைப் பொருளை பயன்படுத்தும் நோக்கில் அதனை அருகே வைத்திருந்தவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி, அவர்களுக்கு எதிராக நேரடி நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, 'போதைப் பொருள் பயன்பாடு தொடர்பில் குறிப்பிடத்தக்க அளவான சந்தேக நபர்கள் சிறைகளில் உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. 

எனவே எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அவ்வாறான பாரிய போதைப் பொருள் கடத்தல்கள், வர்த்தகம் தொடர்பில் தொடர்புபடாத முன் குற்றம் இல்லாத, போதைப் பொருள் பயன்படுத்தியமைக்காக சிறைகளில் உள்ளவர்களுக்கு எதிராக வழக்கு தொடர ஆலோசனை வழங்கப்பட்டது. 

விஷேடமாக நீதி அமைச்சர் அலி சப்றி சட்டமா அதிபருக்கு கொடுத்த ஆலோசனைக்கு அமைய, சட்டமா அதிபர் கைதிகளுக்கு பிணையளிக்கும் விடயம் தொடர்பில் நடமுறையொன்றினை அமுல் செய்ய தேவையான வழிகாட்டல்களை பொலிசாருக்கு வழங்கியுள்ளார். 

சிறைகளில் நிலவும் அதிக நெரிசலை குறைக்கும் விதமாக ஆராயப்பட்ட நிலையில் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதன்படி அவ்வாறான போதைப் பொருள் பாவனை தொடர்பில் விலக்கமறியலில் உள்ளோருக்கு பொலிசார் திங்கட்கிழமைக்குள் வழக்கு தொடுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

அதன்போது அவர்களுக்கு பிணையளிப்பது, ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்.' என தெரிவித்தார்.

No comments:

Post a Comment