நிலவில் தேசிய கொடியை நாட்டிய இரண்டாவது நாடு என்ற பெருமையை பெற்றது சீனா - News View

Breaking

Post Top Ad

Saturday, December 5, 2020

நிலவில் தேசிய கொடியை நாட்டிய இரண்டாவது நாடு என்ற பெருமையை பெற்றது சீனா

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக நிலவில் தங்கள் தேசிய கொடியை நாட்டிய இரண்டாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.

1969 ஆம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ரொங் உட்பட அமெரிக்க விண்வெளி வீரர்கள் அப்பல்லோ விண்கலம் மூலம் நிலவுக்கு பயணம் மேற்கொண்டனர். இவர்கள் 1969 ஜூலை 20ம் திகதி நிலவில் தரையிறங்கினர். 

அங்கு ஆராய்ச்சியை மேற்கொண்ட அமெரிக்க விண்வெளி வீரர்கள் அங்கு அமெரிக்க தேசிய கொடியை நாட்டினர். எட்வின் பஸ் ஆல்ட்ரின் அமெரிக்க கொடியை நிலவில் நாட்டினார். அதன் பின் ரஷியா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் ஆராய்ச்சி செய்த போதும் தனது நாட்டின் கொடியை நிலவில் நாட்டாமல் இருந்தது.

இதற்கிடையில், அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் ஆராய்சி செய்வதில் கடந்த சில ஆண்டுகளாக சீனா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 

அந்த வகையில் 1976ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக நிலவிலிருந்து பாறை துகள்ளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. 

இதற்காக சேஞ்ச் 5 என்கின்ற ஆளில்லா விண்கலத்தை கடந்த 24ம் திகதி சீனா விண்ணில் செலுத்தியது. லாங் மார்ச் 5 ராக்கெட் என்ற ராக்கெட் மூலம் சேஞ்ச் 5 விண்கலம் நிலவுக்கு புறப்பட்டது.

இந்நிலையில், சேஞ்ச் 5 விண்கலம் நேற்று (டிசம்பர் 4) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன்பின் விண்கலத்தில் இருந்து வெளியே வந்த ரோவர் இயந்திரம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியது.

அதன் முதல் நடவடிக்கையாக ரோவரில் சீன விண்வெளி விஞ்ஞானிகளால் அமைக்கப்பட்டிருந்த சீன தேசிய கொடி நிலவின் மேற்பரப்பில் நாட்டப்பட்டது.

இதன் மூலம், நிலவில் கொடி நாட்டிய இரண்டாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றது. நிலவில் பாறை துகள்களை எடுத்துக் கொண்டு சேஞ்ச் 5 விண்கலம் இம்மாத இறுதிக்குள் பூமிக்கு திரும்ப உள்ளது.

சீனாவின் இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் அமெரிக்கா, ரஷியாவிற்கு பிறகு நிலவில் உள்ள பாறைகளை ஆராய்ச்சிக்காக பூமிக்கு கொண்டுவரும் 3வது நாடு என்ற பெருமையை சீனா பெறும்.

இதற்கிடையில், நிலவில் தங்கள் நாட்டின் கொடி நாட்டப்பட்ட புகைப்படத்தை சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும், ரோவர் இயந்திரம் மூலம் நிலவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் சீனா வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad