உலக சுகாதார அமைப்பின் அனைத்து வழிகாட்டல்களையும் பின்பற்றும் அரசாங்கம் ஏன் சடலங்களை அடக்கம் செய்வதில் மாத்திரம் பின்பற்றுவதில்லை : சிலோன் தெளஹீத் ஜமாஅத் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 31, 2020

உலக சுகாதார அமைப்பின் அனைத்து வழிகாட்டல்களையும் பின்பற்றும் அரசாங்கம் ஏன் சடலங்களை அடக்கம் செய்வதில் மாத்திரம் பின்பற்றுவதில்லை : சிலோன் தெளஹீத் ஜமாஅத்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொவிட்டில் மரணிக்கும் ஜனாசாக்களை அடக்கும் உரிமையையே கேட்கின்றோம். மாறாக ஈழத்தை கோரவில்லை. அனுமதி வழங்கினால் அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார வழிகாட்டலின் பிரகாரம் நாங்கள் முன்னின்று மேற்கொள்வோம் என சிலோன் தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் துணைத் தலைவர் மொஹமட் ரஸ்மின் தெரிவித்தார்.

கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரியும் முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து பொரளை கனத்தைக்கு முன்னால் நடத்திய எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட்டில் மரணிப்பவர்களை தகனமும் செய்யலாம், அடக்கமும் செய்யலாம் என உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்திருக்கின்றது. 

அதேபோன்று இந்த தொற்றில் இருந்து பாதுகாக்க உலக சுகாதார அமைப்பு வழிகாட்டல் ஒன்றை அறிமுகப்படுத்தி இருந்தது. அதன் பிரகாரமே அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் ஒரு மீட்டர் இடைவெளியை பேண வேண்டும் என்ற நடைமுறைகளை அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. 

அவ்வாறு இருக்கும்போது, அதே உலக சுகாதார அமைப்புதான் கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்யவும் அனுமதித்திருக்கின்றது. உலக சுகாதார அமைப்பின் அனைத்து வழிகாட்டல்களையும் பின்பற்றும் அரசாங்கம் ஏன் சடலங்களை அடக்கம் செய்வதில் மாத்திரம் பின்பற்றுவதில்லை என கேட்கின்றோம். 

அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தால் எமது நாட்டின் நற்பெயருக்கு சர்வதேச மட்டத்தில் களங்கம் ஏற்பட்டிருக்கின்றது. அரசாங்கத்தின் முட்டாள் தனமான தீர்மானத்தினால் உலகில் பல நாடுகளில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. எனவே நாங்கள் ஈழத்தை கேட்டு போராடவில்லை. ஜனநாயக உரிமையான அடக்கம் செய்ய அனுமதிக்குமாறே கோருகின்றோம். 

அரசாங்கம் மனித உரிமைக்கு மதிப்பளித்து இதற்கான அனுமதியை வழங்க வேண்டும். அதற்காக எந்த நிபந்தனைகளை விதித்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். அடக்கம் செய்ய அரசாங்க ஊழியர்கள் அச்சப்படுவதாக இருந்தால் அதனை நாங்கள் சுகாதார வழிகாட்டலின் பிரகாரம் முன்னின்று மேற்கொள்ள தயாராக இருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment