தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்வது வடக்கு, கிழக்கு தமிழர்களின் ஜனநாயக உரிமையை பறிப்பதற்கு சமம் - சரத் வீரசேகர முட்டாள்த்தனமான அமைச்சரா என்ற கேள்வி எழுகின்றது : சரத் பொன்சேகா - News View

About Us

About Us

Breaking

Monday, December 7, 2020

தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்வது வடக்கு, கிழக்கு தமிழர்களின் ஜனநாயக உரிமையை பறிப்பதற்கு சமம் - சரத் வீரசேகர முட்டாள்த்தனமான அமைச்சரா என்ற கேள்வி எழுகின்றது : சரத் பொன்சேகா

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்வதானது, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை பறிப்பதற்கு சமமானதாகும். சம்பந்தனோ, சுமந்திரனோ இனவாதம் பேசவில்லை, தமிழ் மக்களின் நிலைப்பாட்டையே பேசுகின்றனர். அதனை விளங்கிக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். 

அமைச்சர் சரத் வீரகேசக வெறுமனே தெற்கு சிங்கள மக்களுக்கு மாத்திரம் அமைச்சர் அல்ல, வடக்கு கிழக்கு, தமிழ் முஸ்லிம் மக்களினதும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்பதை அவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் சபையில் சுட்டிக்காட்டினார். 

சுற்றாடல், வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி மற்றும் அகழிகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் காடுகளை மீண்டும் வளர்த்தல் அமைச்சுக்கள் மற்றும் வன வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு மீதான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இயற்கை வளங்களை பாதுகாப்பதில் பூட்டான் சிறந்த எடுத்துக்காட்டாக கூற முடியும். அந்த நாட்டில் 72 வீதம் காடுகளாக பராமரிக்கப்படுகின்றது, ஆனால் அதற்கு மாறாகவே எமது நாட்டில் பலர் உள்ளனர். எப்போது காட்டில் இடம் அபகரிப்பது, மிருகங்களை வேட்டையாடுவது என்றே சிந்தித்துக் கொண்டுள்ளனர். எனவே இனியாவது இயற்கையை பாதுகாக்க நாம் அனைவரும் நடவடிக்கை வேண்டும். 

அதேபோல் யானைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. யானை - மனித முரண்பாடுகளை காரணம் காட்டி யானைகளை கொலை செய்யும் நடவடிக்கையே முன்னெடுக்கப்பட்டது. 

நான் அமைச்சராக இருந்த காலத்தில் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தேன். யானைகளை பாதுகாக்க வேலிகளை அமைத்து அழிவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமைச்சிற்கு பொறுத்தல் இல்லாத சில காரணிகளை நான் சபையில் கூறியாக வேண்டும்.

நாட்டின் எதிர்காலம் குறித்து பேசுபவர்கள் முதலில் ஒழுக்க நெறியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஒழுக்கம் இல்லாதவர்கள் அதிகாரத்திற்கு வந்துள்ள காரணத்தினால் நாடும் ஒழுக்கமற்றதாகவே மாறும். 

அதேபோல் சிவில் நிருவாக அதிகாரிகள் யுத்தத்தை வெற்றி கொண்டதாக வெற்றியை தம்பக்கம் திருப்ப நினைகின்றனர். சரத் வீரசேகரவிற்கு யுத்தம் குறித்து பேச எந்த தகுதியும் இல்லை. அதேபோல் யுத்தத்தை நடத்தும் வேளையில் ஜனாதிபதி தடையாக இருக்கவில்லை எனவும் சரத் வீரசேகர கூறினார். 

ஆனால் 2009 ஜனவரி 31, பெப்ரவரி 1 ஆம் திகதிகளில் போர் நிறுத்தத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார், ஆனால் அதற்கு நான் ஒருபோதும் இணங்கவே இல்லை. இந்த காலத்தில் எமது இராணுவம் பாரிய அளவில் பின்வாங்கினர். விடுதலைப் புலிகளில் தாக்குதலில் 300 பேர் உயிரிழந்தனர். இதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும். 

சரத் வீரகேசரவின் நியமனம் குறித்து தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய செயலாளர் என்னுடனே கதைத்தார். கரன்னாகொட இதற்கு முழுமையான எதிர்ப்பை தெரிவித்த போதும் நானே அவருக்கான உதவிகளை செய்தேன். யுத்த வெற்றி அரசியல் வாதிகளுக்கு செல்ல வேண்டும் என கூறுவது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். யுத்த வெற்றி இராணுவத்தை மாத்திரமே சாரும். இதில் அரசியல்வாதிகள் உரிமை கொண்டாட முடியாது. 

மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் வீரசேகர கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்வது என்பது வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை பறிப்பதற்கு சமமானதாகும். 

அமைச்சர் சரத் வீரசேகர வெறுமனே தெற்கு சிங்கள மக்களுக்கு மாத்திரம் அமைச்சர் அல்ல, வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களினதும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்பதை அவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் ஒருபோதும் இங்கு இனவாதம் பேசவில்லை, அவர்களின் மக்களுக்காக அவர்கள் பேசுகின்றனர். நாமும் அதைத்தானே பேசுகிறோம். இவ்வாறு ஒரு இனம் சார்ந்து பேசும் நபர்களை அரசியல் ரீதியில் தடை செய்ய வேண்டும் என கூறும் அளவிற்கு அவர் முட்டாள்த்தனமான அமைச்சரா என்ற கேள்வி எழுகின்றது. 

கடந்த கால அனுபவங்களை மனதில் வைத்துக் கொண்டு மூவின மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment