கொரோனாவால் மரணிப்போரை தகனம் செய்ய வேண்டுமென்பது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல - ஹலீம் எம்பியின் கேள்விக்கு பதிலளித்த மஹிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Monday, December 7, 2020

கொரோனாவால் மரணிப்போரை தகனம் செய்ய வேண்டுமென்பது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல - ஹலீம் எம்பியின் கேள்விக்கு பதிலளித்த மஹிந்த அமரவீர

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

கொரோனாவில் மரணிப்பவர்களை தகனம் செய்வது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல. தொழிநுட்பக்குழுவின் தீர்மானத்தை மீறி அரசாங்கத்துக்கு செயற்பட முடியாது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் சுற்றாடல், வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.ஏ. ஹலீம் கலந்துகொண்டு உரையாற்றுகையில், மரணிப்பவர்களின் உடலில் இருக்கும் வைரஸ் நீரில் பரவி சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அவ்வாறு இருந்தும் தொழிநுட்பக் குழு எந்த அடிப்படையில் கொரோனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய நிராகரிக்கின்றனர் என்பதை வெளிப்படுத்த வேண்டும். 

சடலம் மண்ணுடன் கலந்து, அதனால் வைரஸ் நீருடன் கலந்துவிடும் என்ற அவர்களின் தீர்மானத்துக்கு எந்த அடிப்படையும் இல்லை. மரணித்தவர்களின் உடலில் இருக்கும் வைரஸ் ஒருபோதும் நீருடன் கலந்து பரவுவதில்லை என உலக சுகாதார அமைப்பின் முன்னாள் உறுப்பினராக இருந்த வைத்தியர் நிஹால் அபேசிங்க உறுதியாக தெரிவித்திருக்கின்றார். 

அதேபோன்று பல வைத்தியர்கள் இது தொடர்பாக பகிரங்கமாக தெரிவிக்கும் நிலையில், இந்த விசேட தொழிநுட்பக் குழு மாத்திரமே அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றது. 

உலக சுகாதார அமைப்பின் தீர்மானத்தையும் தாண்டி, தொழிநுட்பக் குழு இந்த விடயத்தில் இந்தளவு பிடிவாதமாக இருப்பது, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இது ஒரு இனத்தை பழி தீர்ப்பதற்காக செய்கின்றார்களா என எண்ணத்தோன்றுகின்றது என்றார். 

இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொரோனாவில் மரணிப்பவர்களின் இறுதிக் கடமை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள தொழிலுநுட்பக் குழுவுக்கே வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கும் அரசாங்கத்துக்கும் அமைச்சரவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் அரசாங்கம் தலையிடுவதில்லை. குறித்த தொழிநுட்பக் குழு எடுக்கும் தீர்மானத்தையே அரசாங்கம் பின்பற்றுகின்றது. அதனை மீறி அரசாங்கத்துக்கு தீர்மானிக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment