பொரளை பொது மயானத்தில் கட்டப்பட்ட வெள்ளைத் துணிகள் இரவோடு இரவாக அகற்றல் - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

பொரளை பொது மயானத்தில் கட்டப்பட்ட வெள்ளைத் துணிகள் இரவோடு இரவாக அகற்றல்

(நா.தனுஜா) 

வலுகட்டாயமாகத் தகனம் செய்யப்பட்ட 20 நாட்களேயான குழந்தையை நினைவு கூரும் விதமாக பொரளை பொது மயானத்தின் வெளிப்புறத் தடுப்பு வேலியில் கட்டப்பட்ட வெள்ளைத் துணிகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டிருக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த 20 நாள் குழந்தை தகனம் செய்யப்பட்ட பொரளை பொது மயானத்தின் வெளிப்புற தடுப்பு வேலியில் (ஒருபுறம் மாத்திரம்) கடந்த சனிக்கிழமை சிறிய வெள்ளைத் துணிகளைக் கட்டி, அந்தக் குழந்தை நினைவு கூரப்பட்டதுடன் வலுகட்டாயமாகத் தகனம் செய்யும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது.

சிவில் சமூகக் குழுக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, அலி சாஹிர் மௌலானா போன்றோரும் சிவில் சமூக அமைப்புக்களின் உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு வெள்ளைத் துணிகளை மயானத்தின் தடுப்பு வேலியில் கட்டி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் மங்கள சமரவீர, 'பெற்றோரின் விருப்பத்தையும் மீறி வலுகட்டாயமாகத் தகனம் செய்யப்பட்ட குழந்தையை நினைவு கூரும் பொரளை பொது மயானத்தின் வெளிப்புறத் தடுப்பு வேலியில் கட்டப்பட்ட வெள்ளைத் துணிகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டிருக்கின்றன' என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதேவேளை பொரளை பொது மயானத்திற்குச் செல்ல முடியாத பலரும் தத்தமது வீடுகளின் முன்புறமுள்ள தடுப்புகள், கார் கதவுகள் போன்றவற்றில் வெள்ளைத் துணிகளைக் கட்டி தகனம் செய்யப்பட்ட குழந்தையை நினைவு கூர்ந்திருப்பதுடன் அரசாங்கத்தின் இத்தீர்மானத்திற்குத் தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment