ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆளும், எதிர்க் கட்சிகளுக்கிடையில் கடும் வாக்குவாதம் - News View

Breaking

Post Top Ad

Sunday, December 6, 2020

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆளும், எதிர்க் கட்சிகளுக்கிடையில் கடும் வாக்குவாதம்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடமாகியும் அரசாங்கத்துக்கு குண்டுதாரிகளை கண்டுபிக்க முடியாமல் போயுள்ளது. அதனால் இந்த விசாரணையை மறைப்பதற்கா 20ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என்ற சந்தேகம் எமக்கு இருக்கின்றது. இடம்பெறும் விசாரணை தொடர்பில் திருப்தியில்லை. அதனால் அரசியல் லாபம் தேடாமல் குண்டுதாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்த்தில் மெல்கம் ரன்ஜித் தெரிவித்திருக்கின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா சபையில் தெரிவித்தபோது, ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. 

சுற்றுலாத் துறையும் ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பான விசாரணையும் வேறு திசைக்கு செல்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. இந்த விசாரணையில் திருப்தியில்லை, இதனை அரசியல் இலாபத்துக்காக மேற்கொள்ளாமல் குண்டுதாரிகளை கண்டுபிடிக்கும் வகையில் விசாரணை இடம்பெற வேண்டும் என்றே கார்த்தினல் மெல்கம் ரன்ஜித் தெரிவித்திருக்கின்றார். ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது முதல் தேர்தலில் வெற்றி பெறும் வரைக்கும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா பாராளுமன்றத்தில் முழங்கிக் கொண்டே இருந்தார். ஆனால் தற்போது விசாரணையை துரிதப்படுத்த வாய் திறக்காமல் இருக்கின்றார். 

இதன்போது அமைச்சர் ஜோன்ஸ்ட்ன் பெர்ணான்டோ எழுந்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நாங்கள் இருக்கின்றோம். அரசாங்கம் அந்த நடவடிக்கையை சரியாக மேற்கொள்ளும். இடம்பெறும் விசாரணையில் நாங்கள் தலையிடமாட்டோம் என்றார். 

தொடர்ந்து உரையாற்றிய நிரோஷன் பெரேரா எம்.பி, இடம்பெறும் விசாரணையின் போக்கை பார்க்கும்போது, அடிப்படைவாதத்தை இல்லாமலாக்குவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த இவர்கள் தற்போது அதனை மறைக்கும் வகையில் செயற்படுவதாகவே தெரிகின்றது. விசாரணை முறையாக இடம்பெறுவதாக இருந்தால், விசாரணையில் திருப்பதியில்லை என கார்தினல் தெரிவித்திருக்கமாட்டார். அதனால் குண்டுதாரிகளுடன் தொடர்புபட்டவர்கள், அதற்கு அனுசரணை வழங்கியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். ஒரு வருடமாகியும் அதனை செய்ய முடியவில்லையே? 

இதன்போது எழுந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ், இந்த விசாரணையை அரசியலாக்க இடமளிக்க மாட்டோம். சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்போம் என்றார். 

அதனைத் தொடர்ந்து காவிந்த ஜயவர்த்தன எம்.பி, கார்த்தினல் மெல்கம் ரன்ஜித்தை நான் போய் சந்தித்த நேரத்தில் என்னிடமே விசாரணையில் திருப்தியில்லை என தெரிவித்தார். விசாரணையில் குண்டுதாரிகளுக்கு உதவி செய்தவர்கள், அவர்களுக்கு பின்னால் இருந்தவர்கள் தொடர்பில் ஒன்றும் இடம்பெறுவதில்லை என தெரிவித்தார். அதனால்தான் இது தொடர்பாக கேட்கின்றோம் என்றார். 

அதனைத் தொடர்ந்து லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி, குறிப்பிடுகையில், விசாரணையில் குண்டுதாரிகளை கைது செய்ய எந்த நடவடிக்கையும் இடம்பெறுவதில்லை. மாறாக முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஆகியோரையே அடிக்கடி விசாரணைக்கு அழைக்கின்றனர். இவர்கள் குண்டு வைக்கவில்லை என்றார். 

தொடர்ந்து நிரோஷன் பெரேரா எம்.பி, தெரிவிக்கையில், இடம்பெறும் விசாரணை தொடர்பில் ஒரு வருடமாக நான் எதனையும் கேட்கவில்லை. விசாரணைக்கு இடமளித்து க்கொண்டிருந்தோம். ஆனால் முறையான விசாரணை இடம்பெறுவதில்லை என கார்த்தினல் தெரிவித்தன் பின்னரே இதனை கேட்கின்றோம். இது தொர்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை தெரிவித்து, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முயற்சித்தீர்கள். அவருக்கு எதிராக தெரிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களில் ஏதாவது ஒப்புவிக்கப்பட்டிருக்கின்றதா?. இது தொடர்பில் எங்களுக்கு தெரிவிக்க முடியாது எனின் கார்தினாலை சந்தித்து அவரை திருப்திப்படுத்தும் வகையில் அவரிடம் தெரிவியுங்கள். 

இதன்போது எழுந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, இரசகசிய தகவல்களை இங்கு தெரிக்க முடியாது. அடுத்த வாரம் கார்தினார் மெல்கம் ரன்ஜித்தை சந்தித்து விளக்கமளிப்பேன் என்றார். 

அதனைத் தொடர்ந்து ஹரீன் பெர்ணான்டோ எழுந்து, ஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்புடன் சம்பந்தப்பட்ட இலங்கையர் ஒருவரும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அரசாங்கம் தெரிந்து வைத்திருக்கின்றதா? 

இதற்கு அமைச்சர் சரத் வீரசேகர, அந்த ரகசியங்களை தெரிவிக்க முடியாது. வழக்கு விசாரணை இடம்பெறும்போது சிலவேளை சபையில் இருப்பவர்களும் கைது செய்யப்படலாம் என்றார். 

இதன்போது சபையில் இருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் மொஹமட் முஷாரப் எழுந்து, எமது கட்சித் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட எந்தவோரு குற்றச்சாட்டுக்கும் கைது செய்யப்படவில்லை. இப்போது அவர், தேர்தலில் வாக்களிப்பதற்காக புத்தளத்தில் இருந்து மக்களை மன்னாருக்கு பேருந்தில் அழைத்துச் சென்றமைக்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவி்கப்பட்டிருக்கின்றார். அதேபோன்று அவரது தம்பி ரியாஜ் பதியுதீன் அநியாயமாக 5,6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என தெரிவித்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார். அதனால் நிரபராதி என விடுவிக்கப்பட்டவர் தொடர்பில் சபையில் கேள்வி கேட்டும் பதில் சொல்லியும் எந்த பயனும் இல்லை. இந்த தாக்குதலுடன் தொடர்பு பட்டிருப்பதாக உறுதிப்படுத்தினால் தன்னை தூக்கில் இடுமாறு ரிஷாத் பதியுதீன் தெரிவித்திருக்கின்றார். அதேநேரம், ரிஷாத் பதியுதீனை கொலை செய்ய 150 கோடி ரூபா கருணா அம்மானுக்கு வழங்கப்பட்டிருப்பதாக நாமல் குமார பகிரங்கமாக தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக நாமல் குமார கைது செய்யப்பட்டாரா? அது தொடர்பில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதா என கேட்டால், அதற்கு பதில் இல்லை என்றார். 

இறுதியாக லக்ஷ்மன் கிரியெல்ல எழுந்து, ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் ஒன்றுக்கு அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

அதற்கு சபாநாயகர் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அது தொடர்பில் கதைத்து தீர்மானம் எடுப்போம் என தெரிவித்து சபையை தொடர்ந்து கொண்டு சென்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad