தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் கூட்டாகக் கோரிக்கை - நீதி அமைச்சரைச் சந்தித்து மகஜர் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, December 5, 2020

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் கூட்டாகக் கோரிக்கை - நீதி அமைச்சரைச் சந்தித்து மகஜர் கையளிப்பு

நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மகஜர் ஒன்று இன்றையதினம் (05) அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. 

மகஜரை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் மற்றும் மருதபாண்டி இராமேஸ்வரன் ஆகியோர் நிதி அமைச்சரிடம் கையளித்தனர்.

தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தால், சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினரையும் அழைத்து இதுபற்றிக் கலந்துரையாட முடியும் என்றும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அரசியல் கைதிகள் விடயத்தில் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டால் இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டிருந்தார்.

அது மாத்திரமன்றி புதிய அரசியலமைப்புத் தயாரிப்பு விடயத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்களின் நிலைப்பாடுகளும் உள்வாங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், இது தொடர்பில் எழுத்து மூலமான யோசனைகளை முன்வைக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

கைதிகள் விடுதலை மாத்திரமன்றி சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து ஜனாதிபதியிடம் எடுத்துச் செல்வதற்கு நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment