உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், சிறைக் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு - தேசிய மக்கள் சக்தி - News View

About Us

About Us

Breaking

Sunday, December 6, 2020

உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், சிறைக் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு - தேசிய மக்கள் சக்தி

(செ.தேன்மொழி)

மஹர சிறைச்சாலையில் கைதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் ஆணைக்குழுவொன்றை அமைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த விசாரணைகள் பக்க சார்பற்றதும், சுயாதீனமானதுமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

நேற்று சனிக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை வலியுறுத்தியிருக்கும் தேசிய மக்கள் சக்தி அந்த அறிக்கையில், மேலும் கூறியுள்ளதாவது, மஹர சிறைச்சாலையில் நவம்பர் 29 ஆம் திகதி நிராயுதபானி கைதிகளை சுட்டுக் கொலை செய்தமை தொடர்பில் நாட்டு மக்கள் கவலையடைந்துள்ளனர். 

இதன்போது 11 கைதிகள் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் பல வருடங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கைதிகளின் கொலை சம்பவத்தை நினைவுபடுத்துகிறது.

சிறை வைக்கப்படும் கைதிகள் அனைவரும் அரசாங்கத்தின் பொறுப்பிலிருப்பவர்கள். எனவே அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 

இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகளின் மாறுபட்ட கருத்துக்களுக்கு மத்தியில், மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளமை ஆச்சரியத்திற்குரியதல்ல. 

கடுமையான குற்றச் செயலை செய்து ஒருவர் சிறை வைக்கப்பட்டாலும், நாட்டின் பிரஜை என்ற வகையில் அடிப்படை மனித உரிமைகளின் பிரகாரம் அவருக்கு உயிர் வாழ்வதற்கு உரிமை இருப்பதுடன், அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய நபர்களுமாவர்.

கலவரங்களை அடக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பில், குற்றவியல் வழக்கு விசாரணைகள் தொடர்பான குறிப்பேடுகளிலும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிராயுதபானிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்வது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அதனால் இந்த சம்பவத்திற்கு அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

நாட்டின் குற்றவியல் சட்டத்தின் பிரகாரம், இவ்வாறு அரசாங்கத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் கொலை செய்யப்பட்டால், இது தொடர்பாக நீதிவான் ஒருவரின் முன்னிலையில் திறந்த பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

இதேவேளை இவ்வாறு உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பான மரண பரிசோதனைகளை வைத்தியர் ஒருவர் மேற்கொள்ள வேண்டும்.

சட்ட விதிமுறைகளுக்கமைய இடம்பெறும் நீதிவான் பரிசீலனைகள் திறந்த முறையில் இடம்பெறும் போது, அந்த உயிரிழப்புகள் தொடர்பில் எந்தவொரு நபரும் வாக்குமூலம் வழங்குவதற்கு உரிமை உண்டு. 

இந்நிலையில் இந்த பரிசீலனைகள் தொடர்பில் முறையான ஒழுங்கு விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இந்த விசாரணைகளின் இறுதியில் கிடைக்கப் பெறும் முடிவுகளை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைப் போன்று நாட்டு மக்களும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். 

கைதிகளின் உயிரிழப்பு தொடர்பில் அதிகாரிகள் கூறுவது சத்தியமா? என்பது தொடர்பில் உயிரிழந்தவர்களின் மரண மற்றும் பிரேத பரிசோதனை முடிவுகளின் பிரகாரமே தீர்மானம் எடுக்க முடியும்.

அதனால் இது தொடர்பான முடிவறிக்கைகளை பகிரங்கப்படுத்த வேண்டும். எனினும் தற்போது இது தொடர்பான உண்மைகளை மூடி மறைக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தோன்றுகின்றது.

இந்த சம்பவத்தின் பின்னர் நாட்டின் சட்டம் மற்றும் ஜனநாயகம் தொடர்பில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் நாட்டுக்கு அவப்பெயர் கிடைத்துள்ளது.

நாட்டுக்கு கிடைத்துள்ள இந்த அவப்பெயரை நீக்க வேண்டுமெனில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஒழுங்கு விதிகளுக்கமைய உடனே செய்து முடிக்க வேண்டும். 

இது ஒரு கடுமையான சம்பவம் என்பதனால், அது தொடர்பான விசாரணைகள் உயர் நீதிமன்ற நீதிபதியொருவரின் தலைமையில் நியமிக்கப்படும் ஆணைக்குழுவினால் பக்கச்சார்பற்ற முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அத்தோடு மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு இடமளிக்க வேண்டாம் என்று ஜனநாயகத்தை மதிக்கும் மனிதநேயம் மிக்க அனைவரையும் அழுத்தம் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment