லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது ஆஸ்திரியா நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது ஆஸ்திரியா நீதிமன்றம்

லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரியா நாட்டின் நிதி அமைச்சராக இருந்தவர் கர்ல் - ஹினிஸ் கிரேசர் (48). இவர் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் அரசுக்கு சொந்தமான 60 ஆயிரம் குடியிருப்புகள் விற்பனைக்காக ஏலம் விடப்பட்டன. அந்த ஏலத்தில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன. 

அதில், மற்ற போட்டியாளர் நிறுவனங்கள் 960 மில்லியன் யூரோக்களை ஏலத் தொகையாக செலுத்த ஒப்பந்த புள்ளிகளை கொடுத்துள்ளனர். ஆனால், அந்த ஏலத் தொகையை விட 1 மில்லியன் யூரோக்களை அதிகமாக செலுத்த ஒரு தனியார் நிறுவனம் ஏல ஒப்பந்தப் புள்ளிகளை கொடுத்துள்ளது. 

இதன் மூலம் 1 யூரோ அதிகமாக ஒப்பந்த புள்ளி வழங்கிய அந்நிறுவனம் அரசு குடியிருப்புகளை வாங்கிக் கொண்டது.

இதில் மற்ற நிறுவனங்கள் 960 மில்லியன் யூரோவுக்குதான் ஏலத் தொகைக்கான ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கியுள்ளது என்ற தகவலை நிதி அமைச்சர் கர்ல் - ஹினிஸ் கிரோசர் உட்பட சில அதிகாரிகள் ஏலம் எடுத்த அந்த தனியார் நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர். 

அமைச்சர் மறும் அதிகாரிகள் கூறிய தகவலையடுத்து, ஒப்பந்த புள்ளியில் 1 யூரோ அதிகமாக அந்த தனியார் நிறுவனம் கோரி குடியிருப்புகள் விற்பனையை கைப்பற்றியது.

இதற்காக அந்நிறுவனம் நிதி அமைச்சர் கர்ல் - ஹினிஸ் கிரோசர் உட்பட சில அதிகாரிகளுக்கு பல மில்லியன் யூரோக்களை லஞ்சமாக வழங்கியுள்ளது. 

இந்த லஞ்ச விவகாரம் 2011 ஆம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து முன்னாள் நிதி அமைச்சர் உட்பட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 

2 ஆம் உலகப் போருக்கு பின்னர் ஆஸ்திரியாவில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழலாக இந்த ஊழல் கருதப்பட்டது.

இந்நிலையில், இந்த லஞ்ச வழக்கு தொடர்பான விசாரணை இன்று (4) நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், தனியார் நிறுவனத்திடம் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் கர்ல் - ஹினிஸ் கிரேசர் லஞ்சம் பெற்றது உண்மைதான் என தெரியவந்தது. 

இதையடுத்து, முன்னாள் நிதி அமைச்சர் கர்ல் - ஹினிஸ் கிரேசருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வியன்னா நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment