சீனாவில் கத்திக் குத்து தாக்குதல் : 7 பேர் பலி, 7 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 29, 2020

சீனாவில் கத்திக் குத்து தாக்குதல் : 7 பேர் பலி, 7 பேர் காயம்

சீனாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவில் துப்பாக்கிச்சூடு, குண்டு வெடிப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் மிகவும் அரிதிலும் அரிதானதாகும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அங்கு கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. 

இந்நிலையில் சீனாவின் வடக்கு பகுதியில் லியோனிங் மாகாணத்திலுள்ள கையுவான் நகரில் பொது குளியலறைக்கு வெளியே நேற்றுமுன்தினம் (27 கத்தியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தன் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கத்தியால் குத்த தொடங்கினார். 

இந்த கத்திக்குத்து தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மக்கள் அனைவரும் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அலறியடித்தபடி அங்குமிங்குமாக ஓட்டம் பிடித்தனர். 

ஆனாலும் அந்த மர்ம நபர் வெறிபிடித்தவரை போல ஒவ்வொருவரையும் துரத்தி சென்று கத்தியால் குத்தினார். இதில் பலரும் சாலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர்.

இந்த கத்திக்குத்து தாக்குதல் குறித்து தகவறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். 

எனினும் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 7 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 7 பேர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக காயமடைந்தவர்களை மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய அந்த நபரின் பெயர் யாங் என்பதும், அவர் உள்ளூரை சேர்ந்தவர் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அதேசமயம் தாக்குதலுக்கான காரணம் குறித்த தகவல் தற்போதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனாவில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment