பொலன்னறுவையிலிருந்து தப்பிய 5 கைதிகளில் ஒரு கொரோனா தொற்றாளர் கைது - NB 9268 இலக்க பஸ்ஸில் சென்றவர்கள் சுய தனிமைப்படுமாறு வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 31, 2020

பொலன்னறுவையிலிருந்து தப்பிய 5 கைதிகளில் ஒரு கொரோனா தொற்றாளர் கைது - NB 9268 இலக்க பஸ்ஸில் சென்றவர்கள் சுய தனிமைப்படுமாறு வேண்டுகோள்

கொரோனா தொற்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற 5 கைதிகளில் ஒருவரை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொலன்னறுவை, கல்லேல்ல கொவிட் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த கைதிகளில் ஐவர் இன்று (31) அதிகாலை தப்பிச் சென்றதாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து குறித்த ஐவரில் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு தப்பிச் சென்றவர்கள், பயணித்த பஸ்ஸில் சென்றவர்கள் தங்களை சுய தனிமைப்படுத்துமாறு, அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவர்கள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் பயணித்த பயண விபரங்களை அவர் தற்போது அறிவித்துள்ளார்.

இன்று (31) அதிகாலை 5.30 மணிளவில் கல்லேல்லவிலிருந்து, பொலன்னறுவை பஸ் தரிப்பிடத்திற்குச் சென்று, அதிகாலை 5.45 இற்குச் சென்ற பொலன்னறுவை - மாத்தறை வழித் தடத்தைக் கொண்ட பெயர்ப் பலகை கொண்ட, NB 9268 எனும் இலக்கத்தைக் கொண்ட பஸ் மூலம், பொலன்னறுவையிலிருந்து கொழும்பு சென்ற பஸ் மூலம் குருணாகல் வரை சென்றுள்ளனர்.

அதன் பின்னர் வேறு பஸ்களில் அல்லது போக்கு வரத்து முறைகளில் அவர்கள் பயணித்துள்ளதாக தெரிய வருவதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு இன்று அதிகாலை 5.45 மணிக்கு குறித்த பஸ்ஸில் பயணித்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும், அவர்கள் தங்கள் பிரதேசங்களிலுள்ள, பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார பணிமனை உள்ளிட்ட சுகாதாரப் பிரிவினருக்கு அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவ்வாறு மேற்கொள்ளத் தவறுவோர் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் குற்றமிழைக்கப்பட்டோராக கருதப்படுவார்கள் என, அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தப்பிச் சென்ற ஐவரில் ஒருவர், சிலாபம், மாதம்பை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

மாதம்பை பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவினரால் குறித்த நபர் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை சிகிச்சைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐவரின் விபரங்கள்
1. தம்பல்லகே புத்திக விமலரத்ன
வயது: 31
குற்றம்: கர்ப்பழிப்பு

2. மத்துமராலலாககே கவிந்து மதுஷான்
வயது: 27
குற்றம்: போதைப்பொருள் தொடர்பான குற்றம்
முகவரி: 191/M, சுதுவெல்ல வீதி, கிழக்கு வாடிய, வென்னப்புவ

3. விஜேசூரிய ஆரச்சிகே ஹரித கெலும் அப்புஹாமி
வயது: 26
குற்றம்: திருட்டு
2ஆம் குறுக்குத் தெரு, பறூஸ வீதி, மாரவில

4. கெட்டயா என அழைக்கப்படும் இமியா முதியன்சலாகே வசந்த
வயது: 52
குற்றம்: கொள்ளை
அம்பகஹ கொலணி, அங்கம்பிட்டிய, வைக்கால

5. பீ.கே. சுமித் புஷ்பகுமார
வயது: 36
குற்றம்: போதைப்பொருள் தொடர்பான குற்றம்
1219/A, ஜயமாவத்த வீதி, பொரலெஸ்ஸ

இவர்களில் 27 வயதான, கவிந்து மதுஷான் என்பவரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு அபயமளித்தமை தொடர்பில் மாதம்பை பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்க்கப்பட்டுள்ளதாகவும், அஜித் ரோஹண தெரிவித்தார்.

தப்பிச் சென்றவர்கள் தொடர்பில், பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment