19ஆம் திருத்தம் இல்லை என்றால் கடந்த அரசாங்கம் 3 வருடத்திலே வீட்டுக்கு சென்றிருக்கும் - எங்கள் அரசாங்கத்தை வீழ்த்தலாமென கனவிலும் நினைக்க வேண்டாம் : ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

19ஆம் திருத்தம் இல்லை என்றால் கடந்த அரசாங்கம் 3 வருடத்திலே வீட்டுக்கு சென்றிருக்கும் - எங்கள் அரசாங்கத்தை வீழ்த்தலாமென கனவிலும் நினைக்க வேண்டாம் : ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

மக்களுக்கு பிரச்சினை இருப்பதை அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் உணர்கின்றோம். அதற்காக இந்த அரசாங்கத்தை வீழ்த்த மக்கள் இடமளிக்கப் போவதில்லை. அதனால் எமது அரசாங்கத்தை இலகுவில் வீழ்த்தலாம் என கனவிலும் நினைக்க வேண்டாம். அத்துடன் 19ஆம் திருத்தம் இல்லை என்றால் கடந்த அரசாங்கம் 3 வருடத்திலே வீட்டுக்கு சென்றிருக்கும் என ஆளுங்கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் கைத்தொழில், வர்த்தக அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் எம்மை பழிவாங்கும் நடவடிக்கையையே மேற்கொண்டார்கள். சதொச நிறுவனத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து என் மீது பொய் குற்றச்சாட்டுக்களை புனைந்து சிறையில் அடைத்தார்கள். எமது காலத்தில் ஒருபோதும் சதொச நட்டமடையவில்லை. பாரியளவில் லாபமீட்டும் நிறுவனமாக இருந்தது. ஆனால் கடந்த அரசாங்க காலத்தில் பாரியளவில் நட்டமடைந்துள்ளது.

அத்துடன் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த இவர்கள், ஆட்சிக்கு வந்து 2 மாதங்களில் மத்திய வங்கியை கொள்ளையடித்தார்கள். மஹிந்த ராஜபக்ஷ் குடும்பத்தை பழிவாங்கும் வகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ என அனைவரையும் பொய் குற்றச்சாட்டுகளை தெரிவித்து சிறையில் அடைத்தார்கள்.

அவ்வாறு நாங்கள் செயற்பட்டிருந்தால் இன்று எதிர்க்கட்சியில் இருக்கும் அதிகமானவர்கள் சிறையில் இருந்திருப்பார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு செயற்படமாட்டோம்.

கடந்த அரசாங்கத்தின் பழிவாங்கலுக்கு ஆளாகி சிறையில் இருந்தவர்கள்தான் இன்று விடுதலையாகி இருக்கின்றார்கள். பிள்ளையான் எம்.பி 5 வருடம் சிறையில் அடைக்கப்பட்டடிருந்தார். அதேபோன்று துமிந்த சில்வா இன்னும் சிறையில் இருக்கின்றார். அதனால் ஜனாதிபதி துமிந்த சில்வாவுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

மேலும் கடந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுடன் 19ஆம் திருத்தத்தை கொண்டுவந்து ஆட்சியை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தது. அதனால்தான் கடந்த அரசாங்கம் 4 அரை வருடமாக இருந்தது. இல்லாவிட்டால் 3 வருடங்களில் வீட்டுக்கு சென்றிருக்கும். 

தேர்தல் நடத்த அச்சப்பட்டார்கள். பிரதேச சபை தேர்லைக்கூட வெற்றி கொள்ள முடியாமல் போன அரசாங்கமாகும். அதனால் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா காரணமாக பொருளாதாரத்தில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனால் மக்களுக்கும் இன்று பிரச்சினை இருக்கின்றது என்பது எமக்கு தெரியும்.

அதனால் மக்களுக்கு தற்போது இருக்கும் பிரச்சினையை பயன்படுத்திக் கொண்டு இந்த அரசாங்கத்தை வீழ்த்தலாம் என கனவிலும் நினைக்க வேண்டாம். மக்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றார்.

No comments:

Post a Comment