புரெவியின் தாக்கம் குறைவடைகிறது ! மீன்பிடியை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் ! 12 மாவட்டங்களில் 13,368 குடும்பங்கள் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

புரெவியின் தாக்கம் குறைவடைகிறது ! மீன்பிடியை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் ! 12 மாவட்டங்களில் 13,368 குடும்பங்கள் பாதிப்பு

(எம்.மனோசித்ரா)

புரெவி சூறாவளியானது ஆழமான தாழமுக்கமாக வலுவிழந்து நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 05.30 மணியளவில் மன்னாருக்கு மேற்குத் திசையில் ஏறத்தாழ 145 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்நிலையில் சூறாவளி நாட்டை விட்டு மேலும் விலகிச் சென்றுள்ளதால் சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறைவடையும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

எனினும் புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரை கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 55 - 65 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும். எனினும் இடைக்கிடை காற்றின் வேகமானது 75 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்.

புத்தளம் தொடக்கம் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையுள்ள ஆழமான ஆழமற்ற கடற்பிராந்தியங்கள் சற்று கொந்தழிப்பாகக் காணப்படும். எனவே இந்த கடற் பிராந்தியங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சீரற்ற வானிலையின் போது கடற்றொழிலில் ஈடுபட்டு காணால் போன ஒருவரின் சடலம் யாழ்ப்பாணம் - காரைநகர், ஊரி பகுதியில் கரையொதுங்கியுள்ளது. 38 வயதான ஒருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. 

சுழிபுரம் - பெரியபுலோவை சேர்ந்த குறித்த நபர் பொன்னாலை கடற்பகுதியில் இறால் பிடிக்கச் சென்ற போது நேற்று முன்தினம் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சூறாவளி தாக்கம் ஆரம்பித்ததன் பின்னர் கடந்த முதலாம் திகதி முதல் 3 ஆம் திகதி வரையான மூன்று நாட்களில் இலங்கையில் 12 மாவட்டங்கள் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, கண்டி, மாத்தளை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன. 

இவ் அனைத்து மாவட்டங்களிலும் 13,368 குடும்பங்களைச் சேர்ந்த 44,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 6 பேர் காயமடைந்துள்ளனர். 

பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 50 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 2148 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 289 கட்டடங்கள் சிறியளவில் சேதமடைந்துள்ளன. இவற்றில் 2875 குடும்பங்களைச் சேர்ந்த 10,559 பேர் 56 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment