இறுதி பி.சி.ஆர். அறிக்கையின் பின்னரே பேலியகொடை மீன் சந்தை மீண்டும் திறக்கப்படும் - கடற்றொழில் ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 11, 2020

இறுதி பி.சி.ஆர். அறிக்கையின் பின்னரே பேலியகொடை மீன் சந்தை மீண்டும் திறக்கப்படும் - கடற்றொழில் ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஊழியர்களின் இறுதி பி.சி.ஆர். அறிக்கையின் அடிப்படையிலேயே பேலியகொடை மீன் சந்தையை மீண்டும் திறப்பதற்கான திகதி நிர்ணயிக்கப்படும். என கடற்றொழில் ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பேலியகொடை மொத்த மீன் சந்தை தொகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் தற்காலிகமாக மூடிவிட தீர்மானித்தோம். 

மக்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் கருத்தில் கொண்டு, அங்கு ஊழியர்களிடம் பெற்றுக் கொள்ளப்படும் இறுதி பி.சி.ஆர். அறிக்கையின் அடிப்படையிலேயே, மீன் சந்தையை மீண்டும் திறப்பதற்கான திகதி நிர்ணயிக்கப்படும். 

அத்துடன் மீன் சந்தை திறக்கப்படும்போது ஆரம்பமாக மொத்த வியாபாரிகளுக்கு மாத்திரம் திறக்கப்படும். பின்னர் சுகாதார வழிகாட்டல் மற்றும் சட்டத்தின் பிரகாரம் சில்லறை வியாபாரத்துக்கு முறையான வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கின்றோம். 

பேலியகொடை மொத்த மீன் விற்பனை சந்தையில் கொரோனா கொத்தணி உருவாகியதுடன், மீன் உட்கொள்வதன் மூலம் கொவிட் 19 தொற்று பரவலாம் என்றதொரு கருத்து பரவியது. அதனால் இந்த தொழிலில் ஈடுபட்டுவந்த அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான கருத்துக்களின் விஞ்ஞான ரீதியிலான எந்த அடிப்படையும் இல்லை என உலக சுகாதார அமைப்பு மற்றும் விசேட வைத்திய நிபுணர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

பேலியகொடை மீன் சந்தையை மூடியதன் மூலம் நாட்டில் 21 கடற்றொழில் துறைமுகங்களில் கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் மற்றும் கடற்றொழில் துறைமுகங்களில் பணியாற்றிவரும் அதிகாரிகள் உட்பட 324 பேரிடம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மூன்று பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் பேலியகொடை மொத்த மீன் சந்தையின் கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான விற்பனை நிலையங்களில் சேவையில் இருக்கும் பணியாளர்களை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தினோம். ஆரம்ப கட்டமாக அதில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் சேவையில் ஈடுபட்டுவந்த 100 க்கும் அதிகமானவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினோம். என்றாலும் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஊழியர்களின் இறுதி பி.சி.ஆர். அறிக்கையின் அடிப்படையிலேயே பேலியகொடை மீன் சந்தையை மீண்டும் திறப்பதற்கான திகதி நிர்ணயிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment