சுகாதாரத் துறைக்கு நிதியொதுக்காது பாதுகாப்புத் துறையை பலப்படுத்தியுள்ளனர், தமிழ் மக்களை ஏமாற்றியதாகவே இவர்களுடைய வரலாறுகள் உள்ளன - ஸ்ரீதரன் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 18, 2020

சுகாதாரத் துறைக்கு நிதியொதுக்காது பாதுகாப்புத் துறையை பலப்படுத்தியுள்ளனர், தமிழ் மக்களை ஏமாற்றியதாகவே இவர்களுடைய வரலாறுகள் உள்ளன - ஸ்ரீதரன் எம்.பி.

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

முழு நாடும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முகங்கொடுத்துள்ள நிலையில் சுகாதார துறைக்கே அதிகளவில் நிதி ஒதுக்கியிருக்க வேண்டும், ஆனால் இப்போதும் அரசாங்கம் பாதுகாப்புத் துறையை பலப்படுத்தும் நோக்கத்தில் யுத்த வரவு செலவு திட்டமொன்றையே முன்வைத்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சபையில் குற்றம் சுமத்தினார். 

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் கொரோனா நெருக்கடிகள் எழுந்த வேளையில் யுத்தத்தை கட்டுப்படுத்தியதை போன்று கொரோனாவையும் அடக்கி விடுவோம் என்று சில அமைச்சர்கள் மார்தட்டினர். அந்த நேரத்தில் ஐந்து அல்லது ஆறு பேர்தான் நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்திருந்தனர். ஆனால், தற்போது 66 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 

நாட்டில் இன்று மிகப்பெரும் சுகாதார நெருக்கடி உள்ள நிலையில் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மிகவும் குறைவு. இந்த நாட்டில் தமிழ் பேசும் தமிழ் தேசிய இனமும், சிங்களம் பேசும் சிங்கள தேசிய இனமும் என இரண்டு தேசிய இனங்கள் உள்ளன. நாங்கள் சிங்கள மக்களின் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியங்கள் மற்றும் வரலாறுகளை மதிக்கிறோம்.

அதேபோன்று தமிழ் மக்களின் பாரம்பரியங்களும், தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறான பல்லினத்தன்மை கொண்ட ஒரு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் இந்த நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு சென்றிருக்கும்.

கடந்த 6ஆம் 8ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்துக்கு அமைச்சர்கள் வருகைதந்த ஒரு கூட்டம் ஒரு சிறிய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் எவ்வித சுகாதார நடைமுறைகளும் பின்பற்றப்பட வில்லை.

250 பேர் வரை கூடியிருந்தனர். ஆனால், 10 ஏக்கர் உள்ள ஒரு துயிலும் இல்லத்தில் 30 பேர் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி அந்த இடத்தில் புற்களை அகற்றுவதில்தான் கொரோனா பரவுவதாக பொலிஸாருக்கும் சுகாதாரத் துறைக்கும் இராணுவத்தினருக்கும் தெரிகிறது. இது எந்த நாட்டில் உள்ள சட்டம்? 

இந்த நாடு இயல்பாகவே இரண்டாகவுள்ளது. வடக்கிலும், கிழக்கிலும் வாழும் மக்களிடம் நாம் ஒரு வேற்று நாட்டில் வாழும் எண்ணமும் உணர்வுமே உள்ளது. ஒரு இலட்சத்தி ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் குவிக்கப்பட்டு அவர்களின் பிரசன்னத்தில் அந்த மக்கள் அடக்கப்படுகின்றனர். சொந்த நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

சுதந்திரமாக அங்கு வாழ முடியாதுள்ளது. காணாமல் போனவர்களுக்கு ஒரு பதிலை சொல்ல முடியாதுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளுடன் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சிறையில் இருந்திருந்தார்.

தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக கூறியிருந்தார். இன்று அவருக்கு பெரும்பான்மை உள்ளது. அவருடைய சித்தப்பா நாட்டின் ஜனாதிபதி, அப்பா பிரதமர். ஏன் அவரால் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாதுள்ளது? தமிழ் மக்களை ஏமாற்றியதாகவே இவர்களுடைய வரலாறுகள் உள்ளன என்றார்.

No comments:

Post a Comment